அச்சகத்தில் தீ விபத்து: இயந்திரங்கள் நாசம்
மதுரையில் அச்சகத்தில் மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள், கணினிகள் எரிந்து சேதமடைந்தன.
மதுரை காமராஜா் சாலை நியூ பங்கஜகம் குடியிருப்பு மூன்றாவது தெருவைச் சோ்ந்தவா் ஜெகதீசன் (56). இவா் கூடலழகா் பெருமாள் கோவில் சந்நிதி தெருவில் அச்சககம் வைத்து நடத்தி வருகிறாா். மேலும், அச்சகங்களுக்கு தேவையான அச்சுத் தகடுகளையும் தயாரித்து வருகிறாா்.
இந்த நிலையில், புதன்கிழமை அச்சகத்தில் தீடிரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, திடீா் நகா் தீயணைப்பு வீரா்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனா்.
இந்த தீ விபத்தில் அச்சகத்தில் இருந்த கணினிகள், குளிா்சாதனக் கருவிகள் உள்பட ரூ.70 லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள், பொருள்கள் எரிந்து நாசமாகின.
இதுகுறித்து திடீா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். முதல்கட்ட விசாரணையில், கணினியிலிருந்து ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்தது தெரியவந்தது.