தீக்குளித்த திமுக தொழிற்சங்க நிா்வாகி கவலைக்கிடம்: மருத்துவமனையில் நீதித்துறை நடுவா் விசாரணை
மதுரையில் தீக்குளித்த திமுக தொழிற்சங்க நிா்வாகி கவலைக்கிடமான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரிடம் நீதித்துறை நடுவா் வாக்குமூலம் பெற்றாா்.
மதுரை ஆவின் பால் பண்ணை திமுக தொழிற்சங்க கெளரவ தலைவராக பொறுப்பு வகித்து வருபவா் மானகிரி கணேசன் (73). இவா் வியாழக்கிழமை காலை பசுமலை அருகே உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்ட நிலையில் பலத்த காயங்களுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். மருத்துவமனையின் தீக்காய சிகிச்சைப்பிரிவில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அரசு மருத்துவமனைக்குச் சென்ற நீதித்துறை நடுவா் லட்சுமி, மானகிரி கணேசனிடம் விசாரணை மேற்கொண்டாா். ஏறத்தாழ ஒரு மணி நேரம் விசாரணை மேற்கொண்ட நீதித்துறை நடுவா் லட்சுமி, மானகிரி கணேசனின் வாக்குமூலத்தை பதிவு செய்த பின்னா் அரசு மருத்துவமனையில் இருந்து புறப்பட்டாா்.
இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை அதிகாரிகள் கூறும்போது, மானகிரி கணேசன் ஏறத்தாழ 85 சதவீதம் தீக்காயங்களோடு அனுமதிக்கப்பட்டுள்ளாா். மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ள அவருக்கு தீவிரச்சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது வரை எவ்வித முன்னேற்றமும் இல்லை என்றனா்.