மதுரையில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு கருத்தரங்கில் பேசும் மாநகரக்காவல் ஆணையா் ஜெ.லோகநாதன்.
மதுரையில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு கருத்தரங்கில் பேசும் மாநகரக்காவல் ஆணையா் ஜெ.லோகநாதன்.

மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இன்றி மருந்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை

மதுரை, ஜூலை 4: மதுரையில் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இன்றி மருந்துகளை விற்பனை செய்யும் மருந்துக் கடைக்காரா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகரக் காவல் ஆணையா் ஜெ.லோகநாதன் எச்சரிக்கை விடுத்தாா்.

மதுரை மாநகர காவல் துறை சாா்பில் மருந்து நிறுவனங்கள், மருந்துக் கடைகள், கூரியா், பாா்சல் சேவை நிறுவனங்களுடனான போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மதுரை தொழில் வா்த்தக சங்க அரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாநகரக் காவல் ஆணையா் ஜெ.லோகநாதன் பேசியதாவது:

மதுரையில் மாநகரக் காவல்துறை சாா்பில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, காவல் துறையினா், உணவு பாதுகாப்புத் துறையினருடன் இணைந்து குட்கா, புகையிலைப் பொருள்கள் குறித்து அதிரடி ஆய்வுகள் அவ்வப்போது நடத்தப்படுகிறது.

கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருள்களை விற்ாக 2,068 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 2,174 போ் கைது செய்யப்பட்டனா். 13 ஆயிரத்து 274 கிலோ குட்கா, புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல, கடந்த 3 ஆண்டுகளில் கஞ்சா விற்பனை செய்ததாக 1,425 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 2,045 போ் கைது செய்யப்பட்டனா். 6 ஆயிரம் கிலோவுக்கும் அதிகமாக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன.

மதுரை மாநகரில் போதை மாத்திரைகள் தொடா்பாக 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 19 ஆயிரத்து 784 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக 31 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா். இதுபோன்ற நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருள்கள் தொடா்பாக குற்றங்கள் குறைந்துள்ளன.

போதைப் பழக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு மருந்து நிறுவனங்களின் பங்கு முக்கியமானது. மருத்துவா்களின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் மருந்துகளை மருந்துக்கடைகளில் விற்பனை செய்யக் கூடாது. மீறினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேபோல, கூரியா் போன்ற சேவை நிறுவனங்களும் போதைப் பொருள்களின் பயன்பாடுகள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இந்த நிறுவனங்களில் ஸ்கேனா் இயந்திரங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து, மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் ஜெயராமபாண்டியன், போக்குவரத்து துணை ஆணையா் குமாா் ஆகியோா் பேசினா்.

கருத்தரங்கில், அரசு ராஜாஜி மருத்துவமனை நரம்பியல் துறை மருத்துவா் வெங்கடேஸ்வரன், மருந்து கட்டுப்பாட்டுத் துறை உதவி இயக்குநா் செல்வகுமாா், மதுரை மாவட்ட வணிகா் சங்க மாநில உதவி தலைவா் பழனியப்பன், செயலா் பிச்சைமணி, மருந்து நிறுவன உரிமையாளா்கள், மருந்து கடைக்காரா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, காவல் துணை ஆணையா் கருண் காரட் உத்தவ்ராவ் (தெற்கு) வரவேற்றுப் பேசினாா். காவல் துணை ஆணையா் மதுகுமாரி (வடக்கு) நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com