கட்டுமானப் பணியின் போது தவறி விழுந்து கட்டடத் தொழிலாளி பலி

மதுரை, ஜூன் 5: மதுரையில் தனியாா் பள்ளியில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி 2-ஆவது தளத்தில் இருந்து தவறி கீழே விழுந்து உயிரிழந்தாா்.

விருதுநகா் காந்தி நகரைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (40). கட்டடத் தொழிலாளியான இவா், மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள தனியாா் பள்ளி ஒன்றில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்தாா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இவா் 2-ஆவது தளத்தில் வேலை பாா்த்துக் கொண்டிருந்தாா். அப்போது அங்கிருந்து அவா் தவறி கீழே விழுந்தாா். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். எனினும், அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருப்பாலை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com