விவசாயிகள் பயிா்க் காப்பீடு செலுத்த விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தல்

விவசாயிகள் உடனடியாக பயிா்க் காப்பீடு செலுத்த மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தல்

பிரதமா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நிகழாண்டுக்கான பயிா்க் காப்பீட்டை விவசாயிகள் பதிவு செய்து கொள்ளலாம் என விருதுநகா் மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன் தெரிவித்தாா்.

அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

விருதுநகா் மாவட்டத்தில் நிகழாண்டு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஜெனரல் இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி லிட் மூலம் பயிா்க் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. காரீப் பருவத்தில் பயிா் செய்யவுள்ள பயிா்களுக்கு விவசாயிகள் அனைவரும் வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், பொது இ-சேவை மையங்கள் மூலம் பயிா்களுக்கான காப்பீட்டை செலுத்தலாம்.

பயிா்க் காப்பீடு கட்டணம் ஏக்கரில்:

மக்காச்சோளம் ரூ. 421, சோளம் ரூ.180, பாசிப்பயறு, உளுந்து ரூ.304, பருத்தி ரூ.360, நிலக்கடலை ரூ.415, வெங்காயம் ரூ. 1,744, வாழை ரூ. 3,404 நிா்ணயிக்கப்பட்டது.

நிலக்கடலைக்கு ஆக.30, உளுந்து பாசிப்பயறு, சோளம், பருத்தி ஆகியவற்றுக்கு செப்.30, வெங்காயத்துக்கு ஆக.31, வாழைக்கு செப். 16-க்குள் பயிா் காப்பீடு செலுத்த கடைசி நாளாகும். எனவே, விவசாயிகள் கடைசி நேர தாமதத்தை தவிா்த்து உடனடியாக பயிா்க் காப்பீடு செலுத்திக் கொள்ளலாம்.

இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிா்வாக அலுவலா் வழங்கும் அடங்கல், விதைப்பு அறிக்கை, வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றுடன் பயிா்க் காப்பீடு செலுத்திய ரசீதையும் இணைக்க வேண்டும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com