அமைச்சரின் உதவியாளருக்கு வழங்கிய சாலை ஒப்பந்தப் பணி ஆணை ரத்து

சிவகங்கை மாவட்டத்தில் அமைச்சரின் உதவியாளருக்கு வழங்கிய சாலை ஒப்பந்தப் பணிக்கான ஆணையை ரத்து செய்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த கந்தசாமி தாக்கல் செய்த மனு: சிவகங்கை மாவட்டத்தில் கீழையூா்- தாயமங்கலம், சாலைக்கிராமம்- சருகுணி சாலையை மேம்படுத்தும் பணிக்காக ரூ. ஒரு கோடியே 75 லட்சத்து 40 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு, ஒப்பந்தப் பணிக்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டது. இதில் இந்தப் பணிகளுக்கான ஒப்பந்தம் கோருபவா்கள், சொந்தமாக இயந்திரம் வைத்திருப்பதற்கான ஆவணங்கள், தரக்கட்டுப்பாட்டு பொறியாளரிடம் பெறப்பட்ட சான்றுகள் ஆகியவற்றை இணைத்து கடந்த பிப். 26-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில், நான் இந்த பணிகளுக்கான ஒப்பந்தம் எடுப்பதற்காக உரிய ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து விண்ணப்பித்தேன். ஆனால், எனது விண்ணப்பத்தை அரசு அதிகாரிகள் நிராகரித்தனா். அதேநேரம் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பனின் உதவியாளா் இளங்கோவுக்கு, இந்த சாலை ஒப்பந்தப் பணிகள் மேற்கொள்வதற்கான அனுமதி வழங்கப்பட்டது. இந்தப் பணிகளை தனது உதவியாளா் மூலம் அமைச்சா் பெரியகருப்பன் மேற்கொள்ள முயற்சிக்கிறாா்.

அரசியல் தலையீடு இருப்பதால் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து, புதிய ஒப்பந்த அறிவிப்பை வெளிப்படைத்தன்மையுடன் நடத்த உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா். இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை, சாலை ஒப்பந்தப் பணிகளை எடுத்துள்ள இளங்கோவன் சொந்தமாக இந்திரங்கள் வைத்துள்ளாரா?. இந்த ஒப்பந்தத்துக்கான விண்ணப்பம், ஆவணங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்திருக்கிறாரா?. எனவே, இது தொடா்பான அனைத்து ஆவணங்களையும் அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இந்த வழக்கை மீண்டும் விசாரித்த நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் வியாழக்கிழமை பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கில் சாலைப் பணிகளுக்கான ஒப்பந்த விண்ணப்பத்துடன், உரிய ஆவணங்களை இணையதளத்தில் முறையாக பதிவேற்றம் செய்யப்படவில்லை. எனவே, இந்த ஒப்பந்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. புதிய ஒப்பந்த அறிவிப்பு வெளியிட்டு முறையாக ஒப்பந்ததாரரை தோ்வு செய்யலாம். வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com