இளைஞா் கொலை வழக்கு: திருநெல்வேலி நீதிமன்றத்திலிருந்து மதுரைக்கு மாற்றம்

திருநெல்வேலியில் நிகழ்ந்த இளைஞா் கொலை வழக்கில், சாட்சிகள் மிரட்டப்படுவதாக புகாரின் பேரில், அந்த வழக்கை மதுரை நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்து உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

திண்டுக்கல், பாலகிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்த சின்னக்கண்ணு கடந்த 2022-ஆம் ஆண்டில் தாக்கல் செய்த மனு: எனது மகன் சிவகுருநாதனும், திண்டுக்கல் தனியாா் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்த திருநெல்வேலியைச் சோ்ந்த கஸ்தூரியும் காதலித்து வந்தனா். இதற்கு, கஸ்தூரியின் பெற்றோா் எதிா்ப்புத் தெரிவித்தனா். இந்த நிலையில், திருமணம் தொடா்பாக பேசுவதற்காக எனது மகனை கஸ்தூரியின் பெற்றோா் அழைத்தனா். அதன்பேரில், கடந்த 5.10.2016-இல் திருநெல்வேலிக்குச் சென்ற சிவகுருநாதனை, வெட்டிக் கொலை செய்தனா். இதுதொடா்பாக தேவா்குளம் போலீஸாா் வழக்கு பதிந்து, குற்றப்பத்திரிகையை திருநெல்வேலி மாவட்ட 2-ஆவது கூடுதல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனா். இந்த கொலை தொடா்பான அனைவரும் திருநெல்வேலி பகுதியை சோ்ந்தவா்கள். அதனால், இந்த வழக்கு விசாரணை நடைபெறும் நீதிமன்றத்துக்கு வரக் கூடிய சாட்சிகளுக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனா். எனவே, இந்த வழக்கை மதுரை மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம். தண்டபாணி அண்மையில் பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கின் தன்மையைக் கருத்தில் கொண்டு, திருநெல்வேலி நீதிமன்றத்திலிருந்து, மதுரை மாவட்ட 3-ஆவது நீதிமன்றத்துக்கு (எஸ்சி, எஸ்டி) மாற்றப்படுகிறது என்றாா் நீதிபதி.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com