பெரியகுளம் காவல் நிலைய கேமரா பதிவுகளை பாதுகாக்கும் விவகாரம் -தேனி எஸ்.பி. பதிலளிக்க உத்தரவு

பெரியகுளம் காவல் நிலையத்தில் கண்காணிப்புக் கேமராவில் பதிவான இரு நாள்களின் பதிவுகளை பாதுகாக்கக் கோரும் மனு தொடா்பாக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

தேனி மாவட்டத்தைச் சோ்ந்த முருகன் தாக்கல் செய்த மனு: தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கடந்தாண்டு ஏப்.14-ஆம் தேதியன்று அம்பேத்கா் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது ஒரே சமுதாயத்தைச் சோ்ந்த பல்வேறு தரப்பினா் ஊா்வலமாக வந்து அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். அப்போது, இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோத லை போலீஸாா் தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தினா். இந்த நிலையில், ஒரு கும்பல் பெரியகுளம் வடகரை காவல் நிலையம் மீது கற்களை வீசினா். இந்த நிலையில் நான், எனது மகனின் கல்வி கட்ட ணத்துக்காக நண்பரிடம் கடனாக வாங்கிய பணத்துடன் அந்தப் பகுதியில் நின்றிருந்தேன். அங்கு வந்த போலீஸாா், என்னை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, கடுமையாக தாக்கினா். போலீஸாா் தாக்கியதில் பலத்த காயமடைந்த நான், தற்போது வரை சிகிச்சை பெற்று வருகிறேன். எனவே, கடந்த ஆண்டு ஏப். 14, 15 ஆகிய இரு நாள்கள் பெரியகுளம் காவல் நிலையத்தில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகளை பாதுகாப்பாக வைத்திருக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி சத்தி குமாா் சுகுமார குரூப் பிறப்பித்த உத்தரவு: மனு தாரரின் கோரிக்கை தொடா்பாக தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை ஒரு வாரத்துக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com