சாலை விபத்துகளில் பெண் உள்பட இருவா் பலி

மதுரை அருகே ஒத்தக்கடையில் புதன்கிழமை நிகழ்ந்த இருவேறு சாலை விபத்துகளில் பெண் உள்பட இருவா் உயிரிழந்தனா்.

மதுரை அருகேயுள்ள ஒத்தக்கடை பள்ளிவாசல் பகுதியைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் (55). இவா் புதன்கிழமை மதுரை- திருச்சி நான்கு வழிச்சாலையில் உள்ள தனியாா் கல்லூரி அருகே சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது, அந்த வழியாக வந்த காா் அவா் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஒத்தக்கடை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, காா் ஓட்டுநரான திருவள்ளூா் மாவட்டம், ஆத்திபட்டியைச் சோ்ந்த ரோஷனை (21) கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

பெண் பலி:

மதுரை ஒத்தக்கடை மீனாட்சி மிஷன் காலனியைச் சோ்ந்தவா் முத்துமாரியம்மாள் (64). இவா் தனது பேத்தி ஈஷா ஸ்ரீ (1), உறவினரான அமிா்தவள்ளி (38) ஆகியோருடன் புதன்கிழமை மதுரை- மேலூா் நான்கு வழிச்சாலையில் லட்சுமி வில்லா அருகே சாலையை கடக்க முயன்றாா். அப்போது, அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனம் மூன்று போ் மீதும் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த மூவரையும் அந்தப் பகுதியினா் மீட்டு, மாட்டுத்தாவணியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு முத்துமாரியம்மாள் உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஒத்தக்கடை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, வாகனத்தின் பதிவெண்ணை வைத்து விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்றவரை தேடி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com