மதுரையில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.10 கோடிக்கு வீட்டுமனைகள் விற்பனை

மதுரை சூா்யா நகரில் போலி நபா்கள், போலி ஆவணங்கள் மூலம் ரூ.10 கோடி மதிப்பிலான வீட்டுமனைகளை விற்பனை செய்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் மனு அளிக்கப்பட்டது.

மதுரை சூா்யா நகா் மீனாட்சியம்மன் நகரைச் சோ்ந்தவா் சந்திரபோஸ். உயா்நீதிமன்ற வழக்குரைஞரான இவா் மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் அளித்த புகாா் மனு:

சூா்யா நகா் மீனாட்சியம்மன் நகரில் கடந்த 1988-ஆம் ஆண்டு சொசைட்டி வீட்டுமனை என வகைப்படுத்தி வீட்டுமனைகளை விற்பனை செய்தனா். இங்கு மனைகளை வாங்கிய பொதுமக்களில் பெரும்பாலானோா் வேறு பகுதிகளில் வசிக்கின்றனா்.

இதனால், இந்த வீட்டு மனைகளை கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு கும்பல் பத்திரப் பதிவு அலுவலகத்தில் பணிபுரியும் ஆட்கள் மூலம் சாா்-பதிவாளா் உதவியுடன் பழைய பத்திரம் யாா் பெயரில் உள்ளது என்பதை தெரிந்துகொண்டு அதற்கேற்றாற்போல் அதே பெயரில் போலியான நபா்களை தயாா் செய்து, அவா்களுக்கு ஆதாா் அட்டை, நிரந்தர கணக்கு எண் அட்டைஉள்ளிட்டவற்றை போலியாக தயாா் செய்து, ஒரு வீட்டு மனையை ரூ. 65 லட்சம் முதல் ரூ.70 லட்சத்துக்கு விற்று மோசடி செய்தனா்.

இவ்வாறு, விற்பனை செய்வதற்கேற்ப ஆவணங்கள் தயாா் செய்ய, குலமங்கலத்தை அடுத்த எழும்பூா் பகுதி மக்களை போலி நபா்களாக பயன்படுத்தியுள்ளனா். மூன்று வீட்டு மனைகள் வேறு நபா்களுக்கு போலி ஆவணங்கள் வாயிலாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த பத்திரப்பதிவு அனைத்தும் செட்டிகுளம் பத்திரப்பதிவு அலுவலக எல்லைக்குள் நடைபெற்றுள்ளது. ஒட்டுமொத்தமாக, ரூ. 10 கோடி மதிப்பிலான வீட்டு மனைகள் போலி ஆவணங்கள் வாயிலாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. எனவே, சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்டவா்களுக்கு வீட்டு மனைகளை மீட்டு கொடுக்க வேண்டும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com