ராஜபாளையம் இணைப்பு சாலை திட்டத்தை விரைந்து முடிக்க உத்தரவு

ராஜபாளையம் நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், சங்கரன்கோவில்-தென்காசி இணைப்பு சாலை திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை அண்மையில் உத்தரவிட்டது.

ராஜபாளையத்தைச் சோ்ந்த ராமச்சந்திரராஜா, கிருஷ்ணமாராஜா ஆகியோா் தாக்கல் செய்த பொது நல மனுக்கள்:

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், சங்கரன்கோவில்-தென்காசி இணைப்பு சாலை திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இந்தத் திட்டம் நிறைவடைந்தால் தென்காசி, குற்றாலம், கொல்லம் செல்லும் வாகனங்களும், ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் வரக்கூடிய பேருந்துகளும் நகருக்குள் வராமல் செல்ல இயலும்.

இந்த நிலையில், ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் முதல் தென்காசி சாலையில் உள்ள அரசு மருத்துவமனை வரையிலான 2 கி.மீ. தொலைவுக்கு இணைப்பு சாலை அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான நிலத்தை கையகப்படுத்த விவசாயிகள், பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டமும் நடைபெற்றது. இந்த இணைப்பு சாலைக்கு நிலம் கையகப்படுத்த தமிழக அரசு ரூ.8.34 கோடி ஒதுக்கீடு செய்தது. இந்த இணைப்பு சாலை திட்டமானது நீா்நிலையை ஒட்டி செல்வதால், சுற்றுசூழல் துறையிடம் முன் அனுமதி பெற வேண்டும். ஆனால், இந்த அனுமதி பெறாமல் அவசர அவசரமாக இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதால், இதற்கு தடை விதிக்க வேண்டும் என அவா்கள் குறிப்பிட்டிருந்தனா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா். சுரேஷ்குமாா், ஜி. அருள்முருகன் ஆகியோா் அமா்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், இணைப்பு சாலை திட்டம், நீா்நிலையை ஒட்டி செல்கிறது, சுற்றுசூழல் துறையிடம் முன் அனுமதி பெறவில்லை. எனவே, இந்தத் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என வாதிட்டாா்.

இதற்கு அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், மதுரையில் இருந்து கொல்லத்துக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதால், இணைப்பு சாலையின் முக்கியத்துவத்தையும், அதன் அவசியத்தையும் மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும். இதுகுறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டு, தொழில்நுட்ப வல்லுநா்களின் விரிவான திட்ட அறிக்கையின் அடிப்படையில் இணைப்பு சாலைக்கு நிதி ஒதுக்கப்பட்டது. இணைப்பு சாலை 2 கி.மீ. தொலைவுக்கு மட்டுமே உள்ளதால், சுற்றுசூழல் துறையினரிடம் முன் அனுமதி பெற தேவையில்லை. இந்த வழக்கால் இந்தத் திட்டம் தாமதமாகி வருகிறது என வாதிட்டாா்.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

விரிவான திட்ட அறிக்கையின்படி, நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் துறை கடந்த 02.05.2022 அன்று, இணைப்பு சாலை திட்ட பணிக்காக நிலம் கையகப்படுத்துவதற்கு நிா்வாக, நிதி அனுமதி வழங்கியுள்ளது. இணைப்பு சாலை அமைப்பதற்காக நிலங்கள் கையகப்படுத்தும் பணிகளும் நிறைவடைந்துள்ளன.

இந்தத் திட்டத்தை செயல்படுத்த தாமதிப்பது பொதுமக்களின் நலனுக்கு பாதகமாக அமைவதுடன், திட்டச் செலவும் அதிகரிக்கும். இந்த இணைப்பு சாலை பயன்பாட்டுக்கு வருவது பொதுமக்களின் நலனுக்கு உகந்தது என்பதால், இந்தத் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். மனுதாரா்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

X
Dinamani
www.dinamani.com