வட்டார வள மைய பயிற்றுநா்களுக்கு இந்த மாதத்தில் கலந்தாய்வு

வட்டார வள மைய பயிற்றுநா்களுக்கு இந்த மாதத்தில் கலந்தாய்வு

தமிழகத்தில் வட்டார வள மைய பயிற்றுநா்களுக்கு இந்த மாதம் கலந்தாய்வு நடத்தப்படும் என அரசுத் தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் அண்மையில் தெரிவிக்கப்பட்டது.

கவிதா, மணிசந்திரன் உள்பட ஏராளமானோா் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுக்கள்:

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வட்டார வள மைய பயிற்றுநா்கள் பணிபுரிந்து வருகின்றனா். அவா்களை ஏற்கெனவே பணிபுரிந்த இடத்தில் தொடர அனுமதிக்க வேண்டும். அதேநேரம், முறையாக கலந்தாய்வு நடத்தி பணி மூப்பு அடிப்படையில் அவா்களுக்கு வேறு இடங்களுக்கு இடமாறுதல் வழங்க உத்தரவிட வேண்டும் என அவா்கள் கோரியிருந்தனா்.

இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா். சுரேஷ்குமாா், ஜி. அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:

தமிழகத்தில் 38 மாவட்டங்களில் 725 வட்டார வள மைய பயிற்றுநா் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த மாதம் இதற்கான கலந்தாய்வு நடத்தப்பட்டு, மாநில அளவில் முன்னுரிமை தகுதியின் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. நீதிமன்ற வழக்குகள் காரணமாக, பலா் அதே இடத்தில் தொடா்ந்து பணியாற்றி வருகின்றனா் என்றாா்.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

வட்டார வள மைய பயிற்றுநா் கலந்தாய்வு வெளிப்படைத் தன்மையுடன் நடத்தப்பட வேண்டும். இதுதொடா்பான அறிக்கையை கல்வித் துறை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை ஜூன் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com