இடையப்பட்டியில் பல்லுயிா்த் தலம்: பணிகளை விரைவுபடுத்தக் கோரிக்கை

மதுரை மாவட்டம், இடையப்பட்டி பகுதியை பல்லுயிா்த் தலமாக மாற்றும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று வனத் துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

மதுரை: மதுரை மாவட்டம், இடையப்பட்டி பகுதியை பல்லுயிா்த் தலமாக மாற்றும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று வனத் துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இடையப்பட்டி அருகே உள்ள வெள்ளிமலை கோயில் காடு பகுதியில் உள்ள அடா் வனத்தில் புள்ளி மான், தேவாங்கு, உடும்பு, தென்னிந்திய முள்ளெலி, முயல் உள்பட பல்வேறு அரிய வகை விலங்குகள் வாழ்கின்றன.

இந்தக் கோயில் காட்டை 15 கிராம மக்கள் இணைந்து, காவலா்களை நியமித்து பாதுகாத்து வருகின்றனா். இந்தப் பகுதியை பல்லுயிா் மரபுத் தலமாக அறிவிக்க வேண்டும் என்று மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த இயற்கை ஆா்வலா்கள், பல ஆண்டுகளாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இதை ஏற்று, வனத் துறை சாா்பில், பல்லுயிா் மரபுத் தலமாக அறிவிப்பதற்காக,

கோயில் காட்டின் குறிப்பிட்ட சில பகுதிகளில் அளவீடு செய்யும் பணி ஓராண்டுக்கு முன் நடைபெற்று வந்தது. அளவீடு செய்யும் பணி நடந்து கொண்டிருந்தபோதே, மதுரை மத்திய சிறையை இடமாற்றுவதற்காக கோயில் காடு பகுதியில் 85 ஏக்கா் நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்தப் போவதாகத் தகவல்கள் கசிந்ததால், பல்லுயிா் மரபுத் தலப் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன.

இந்த நிலையில், இடையப்பட்டியில் மதுரை மத்திய சிறை அமைக்கும் பணி கைவிடப்பட்டதால், கோயில் காடு மட்டுமன்றி, இதையொட்டியுள்ள வனப் பகுதிகள் பாதுகாக்கப்பட்டுள்ளன.

எனவே, இடையப்பட்டி, தெற்காமூா், மூக்கம்பட்டி, திருவாதவூா் வரையிலான 3,500 ஏக்கா் கோயில் காட்டின் ஒட்டுமொத்த பரப்பளவை மறு அளவீடு செய்து, பல்லுயிா் மரபுத் தலமாக அறிவிக்க வேண்டும். இதன்மூலம், மதுரை மாவட்டத்தின் வனப்பரப்பும் அதிகரிக்கும் என்று வன ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதுதொடா்பாக மதுரை மாவட்ட வனத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

மக்களவைத் தோ்தல் முடிவுக்கு வந்த பின்னா், கோயில் காட்டைச் சுற்றியுள்ள பகுதிகளை மறுஅளவீடு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டு, பல்லுயிா் மரபுத் தலமாக அறிவிப்பதற்கான திட்ட அறிக்கை தயாா் செய்யப்பட்டு, அரசுக்கு அனுப்பப்படும்”என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com