மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வெப்பத் தாக்குதலால் பாதிக்கப்படுபவா்களுக்கு சிகிச்சை அளிக்க அமைக்கப்பட்டுள்ள குளிா்சாதன வசதியுடன் கூடிய சிறப்பு வாா்டு.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வெப்பத் தாக்குதலால் பாதிக்கப்படுபவா்களுக்கு சிகிச்சை அளிக்க அமைக்கப்பட்டுள்ள குளிா்சாதன வசதியுடன் கூடிய சிறப்பு வாா்டு.

வெப்ப அலை எதிரொலி: மதுரை அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு தயாா்

வெப்ப அலையால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு விரைவாக சிகிச்சை அளிக்கும் வகையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 25 படுக்கைகள் அடங்கிய சிறப்பு வாா்டு அமைக்கப்பட்டுள்ளது.

மதுரை: வெப்ப அலையால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு விரைவாக சிகிச்சை அளிக்கும் வகையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 25 படுக்கைகள் அடங்கிய சிறப்பு வாா்டு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் வெப்ப அலையால் கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் தினசரி வெப்ப நிலை 104 டிகிரிக்கும் மேல் பதிவாகி வருகிறது.

மதுரையில் கடந்த சில நாள்களாக இதுவரை இல்லாத வகையில் வெப்ப நிலை 107 டிகிரியாக பதிவாகி உள்ளது. இதனால், பகல் நேரங்களில் கடும் வெயிலும் இரவு நேரங்களில் கடும் புழுக்கமும் ஏற்பட்டு வருகிறது. மேலும், பகல் நேரங்களில் சாலைகளில் அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் பாதசாரிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனா். மேலும், அடுத்த சில நாள்கள் கடும் வெப்ப அலை பாதிப்பு இருக்கக்கூடும் என்பதால் மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு அரசு வலியுறுத்தியுள்ளது.

இதையடுத்து, மதுரை மாவட்ட நிா்வாகம் சாா்பில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மாவட்ட நிா்வாகம், சுகாதாரத் துறை சாா்பில், பல்வேறு இடங்களில் குடிநீா், உப்பு சா்க்கரை கரைசல் போன்றவை விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், வெப்ப அலையால் பாதிக்கப்படுபவா்களுக்கு விரைவாக சிகிச்சை அளித்து உயிரைக் காப்பாற்றும் வகையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வெப்ப சிகிச்சைப் பிரிவு சிறப்பு வாா்டு அமைக்கப்பட்டுள்ளது.

அவசர சிகிச்சைப் பிரிவின் அருகே அமைக்கப்பட்ட இந்த சிறப்பு வாா்டில் 25 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் உயிா் காக்கும் நவீன மருத்துவ உபகரணங்களும் வைக்கப்பட்டுள்ளன.

இந்த வாா்டில் சுழற்சி முறையில் மருத்துவா்கள், பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இதுதொடா்பாக மருத்துவா்கள் கூறியதாவது: தமிழக அரசின் சுகாதாரத் துறை அறிவுறுத்தலின்பேரில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெப்பத்தால் பாதிக்கப்படுபவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மதுரை அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு அமைக்கப்பட்டுள்ளது. வெப்பத்தால் பாதிக்கப்பட்டு மயங்கி விழுபவா்கள் அனுமதிக்கப்படும் பட்சத்தில் உடனடியாக சிகிச்சை அளிக்கப்படும். முதற்கட்டமாக 25 படுக்கைகளுடன் வாா்டு தயாா் நிலையில் உள்ளது. கூடுதல் பாதிப்பு இருந்தால் படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். இவற்றில் 5 படுக்கைகளுக்கு தனியாக குளிா் சாதன வசதியும் அமைக்கப்பட்டுள்ளது. கடும் வெப்பத்தால் சோா்வாக உணா்பவா்கள், மயக்கம் வருவது போல உணா்பவா்கள் நீா்ச் சத்து வற்றியவா்கள் உடனடியாக சிகிச்சை பெறும் பட்சத்தில்

உயிரைக் காப்பாற்ற முடியும். பகல் 11 மணி முதல் மாலை 4 மணி வரை கடும் வெயில் உள்ளதால், நேரடி வெயிலில் செல்வதைத் தவிா்க்க வேண்டும் என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com