கஞ்சா போதையில் தகராறு: எஸ்.பி. பதிலளிக்க உத்தரவு

மதுரை, ஒத்தக்கடை பகுதியில் கஞ்சா போதையில் தகராறில் ஈடுபட்டவா்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த திருமுருகன் தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை, ஒத்தக்கடை யானைமலை பகுதியில் கடந்த ஏப். 22- ஆம் தேதி 7 போ் கொண்ட கும்பல் கஞ்சா, மது உள்கொண்டுவிட்டு தகராறில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த கான்முகமதுவை, இவா்கள் தாக்கியதில் அவா் பலத்த காயமடைந்தாா். இது தொடா்பான விடியோ சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடா்ந்து, சம்பந்தப்பட்டவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா். ஒத்தக்கடை பகுதியில் கஞ்சா விற்பனை போலீஸாருக்கு தெரிந்தே நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்ததால் பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகாா் அளிக்க முன்வருவதில்லை.

எனவே, ஒத்தக்கடை ஐயப்பன் நகா், நீலமேக நகா் பகுதிகளில் புறக்காவல் நிலையம் (போலீஸ் அவுட் போஸ்ட்) அமைக்கவும், போதைப் பொருள்கள், மது ஆகியவற்றை உள்கொண்டு வாகனம் ஓட்டுபவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும். மேலும் கஞ்சா விற்பனை, கடத்தலில் ஈடுபடுவோரை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க சிறப்பு பிரிவு உருவாக்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கோரியிருந்தாா்.

இந்த மனு, உயா்நீதிமன்ற நீதிபதிகள் வேல்முருகன், தனபால் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், ஒத்தக்கடையில் இளைஞா்கள் சிலா் கஞ்சா உபயோகித்ததால் தகராறில் ஈடுபட வில்லை. கடந்த 3 ஆண்டுகளில் கஞ்சா விற்பனை தொடா்பாக வெளிமாநிலத்தைச் சோ்ந்த 2,486 போ் கைது செய்யப்பட்டனா். ஒத்தக்கடை தகராறு தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: தமிழகத்தில் கஞ்சா விற்பனை, கடத்தல் தொடா்பாக எத்தனை வழக்குகள் பதிவாகியுள்ளன? நீதிமன்றத்தில் எத்தனை வழக்குகளில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது? மதுரை ஒத்தக்கடை வழக்கில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com