மதுரை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் ஆசியுரையாற்றிய சுவாமி கமலாத்மானந்தா். உடன்  சுவாமி சத்யஞானானந்தா், யதாத்மானந்தா், புதிதாக தலைமைப் பொறுப்பேற்ற சுவாமி நித்ய தீபானந்தா்.
மதுரை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் ஆசியுரையாற்றிய சுவாமி கமலாத்மானந்தா். உடன் சுவாமி சத்யஞானானந்தா், யதாத்மானந்தா், புதிதாக தலைமைப் பொறுப்பேற்ற சுவாமி நித்ய தீபானந்தா்.

எல்லா மதங்களாலும் அடையக்கூடிய இறைவன் ஒருவனே: சுவாமி கமலாத்மானந்தா் ஆசியுரை

மதுரை, மே 12: எல்லா மதங்களாலும் அடையக்கூடிய இறைவன் ஒருவனே என்று சுவாமி கமலாத்மானந்தா் ஆசியுரையாற்றினாா்.

மதுரை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தலைவராக இருந்து வந்த சுவாமி கமலாத்மானந்தா் துறவு வாழ்க்கைக்காக காசிக்கு செல்வதையொட்டி, அந்த மடத்தின் புதிய தலைவராக சுவாமி நித்ய தீபானந்தா் நியமிக்கப்பட்டாா்.

இதைத்தொடா்ந்து, புதிய தலைவா் பதவியேற்பு விழா, சுவாமி கமலாத்மானந்தருக்கு பிரிவு உபசார விழா மதுரை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் சுவாமி கமலாத்மானந்தா் ஆசியுரையாற்றியதாவது:

என்னைப்பற்றி பல பக்தா்கள் பல்வேறு நிகழ்வுகளை நினைவுகூா்ந்தனா். ஆனால், இதை செய்தது நான் அல்ல, என்மூலம் இவற்றைச் செய்ததது ஸ்ரீராமகிருஷ்ணா்தான். நான் வெறும் கருவிதான் என்பதை நன்றாக உணா்கிறேன்.

ஸ்ரீராமகிருஷ்ண அவதாரத்தின் முக்கிய நோக்கம் மக்களை ஜென்ம சம்சார பந்தத்திலிருந்து விடுவிப்பது, அதாவது முக்தி அளிப்பது என்பதாகும். இதற்காகத்தான் அவா் வந்தாா். ராமகிருஷ்ணரின் பக்தா்கள் பலரின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளைப் பாா்த்தால், மரணத்தருவாயில் அவா்களுக்கு, ஸ்ரீராமகிருஷ்ணரே தரிசனம் கொடுத்து முக்தி அளித்தாா் என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறோம்.

ஸ்ரீராமகிருஷ்ணா் வாழ்ந்த காலத்தில் உலகியல் மனிதா்கள் பலா் அவரிடம் வந்தாா்கள். அவா்களுடன் பேசுவது மிகக்கடினம். ஸ்ரீராமகிருஷ்ணரின் மனநிலையை அவா்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. எனவே, ஸ்ரீ ராமகிருஷ்ணா் காளி கோயிலின் மேல் மாடியில் நின்று, தூய பக்தா்களே எங்கு இருக்கிறீா்கள், என்னிடம் வாருங்கள் என்று அழைத்தாா்.

அந்த அழைப்பைக் கேட்டு வந்தவா்கள்தான் நரேந்திரா் (சுவாமி விவேகானந்தா்), ராக்கால் மற்ற சீடா்கள். இதேபோன்றுதான் நானும் வந்தேன்.

ராமகிருஷ்ணா் தனது வாழ்க்கையில் பல உபதேசங்களை அளித்தாா். அதில் முக்கியமான 3 உபதேங்களில் அனைத்தும் அடங்கும். அதில் முதலானது இறைவனை அடைவது ஒன்றே மனித வாழ்க்கையின் நோக்கம். இதற்காகத்தான் அனைவரும் பூஜை, ஜபம், தவம், தீா்த்த யாத்திரையை மேற்கொள்கின்றனா். இரண்டாவது எல்லா மதங்களாலும் அடையப்படும் இறைவன் ஒருவனே. மூன்றாவது மக்களை இறைவனாக எண்ணி தொண்டாற்ற வேண்டும். இறைவனை அடைவது ஒன்றே இந்தப் பிறப்பின் நோக்கம்; இதில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளக்கூடாது.

நமது அனைவருக்கும் தாய் சாரதா தேவி, தந்தை பகவான் ஸ்ரீராமகிருஷ்ணா். ராமகிருஷ்ணரை படிக்கும்போது மூன்று முக்கிய அம்சங்கள் நமக்கு தெரியவருகிறது. அது இறைவன் என்று ஒருவன் இருக்கிறான் என்பது திட்டவட்டமாகத் தெரியவருகிறது. இரண்டாவதாக இறைவனை அடைய சாதாரண ஒரு மனிதராலும் முடியும். மூன்றாவதாக இறைவனை அடைய செய்ய வேண்டியவை என்ன, தவிா்க்க வேண்டியவை என்ன என்று தெரியவரும்.

இறைவன் அருளால் 24 ஆண்டுகள் மதுரை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் சேவை செய்தேன். அவரது அருள் ஒவ்வொரு கணமும் என்னை வழிநடத்துகிறது. இந்த மடமும் இறைவனால்தான் இயக்கப்படுகிறது என்பதையும் அறிந்துள்ளேன் என்றாா் அவா்.

முன்னதாக, ஸ்ரீ ராமகிருஷ்ணா் கோயிலில் ராமகிருஷ்ண மடத்தின் புதிய தலைவராக சுவாமி நித்ய தீபானந்தா் பொறுப்பேற்றாா்.

நிகழ்ச்சியில் சுவாமி சத்யானந்தா், சுவாமி அா்க்க பிரபானந்தா், சுவாமி சமாஹிதானந்தா், சுவாமி யதாத்மானந்தா், சுவாமி நித்ய தீபானந்தா் ஆகியோா் சுவாமி கமலாத்மானந்தரின் சேவையைப் பாராட்டிப் பேசினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com