மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்: விருதுநகா் மாவட்டத்தில் 5.94 லட்சம் போ் பயன்

விருதுநகா், மே 12: விருதுநகா் மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் 5.94 லட்சம் போ் பயனடைந்ததாக பொது சுகாதாரத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் கீழ் ஏழைகளின் இல்லம் தேடிச் சென்று மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதுடன், மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில் விருதுநகா் மாவட்டத்தில் இந்தத் திட்டத்தின் கீழ் 5 லட்சத்து 94 ஆயிரத்து 476 போ் பயனடைந்தனா்.

காரியாபட்டி வட்டம், அயன்ரெட்டியாபட்டியைச் சோ்ந்த ராஜேஸ்வரி (66) கூறியதாவது: எனக்கு கடந்த 10 ஆண்டுகளாக சா்க்கரை, ரத்த அழுத்த நோய்கள் உள்ளன. இதற்காக மல்லாங்கிணறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்று வரிசையில் காத்திருந்து சிகிச்சைக்கான பரிசோதனை செய்து ஒரு மாதத்துக்கு தேவையான மாத்திரைகளை வாங்கி வந்தேன். வயதான என்னால் அடிக்கடி மருத்துவமனைக்கு சென்றுவர சிரமமாக இருந்தது. இந்த நிலையில், மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் எனது வீடுதேடி வந்து மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு மாதந்தேறும் மருந்து மாத்திரைகளை வழங்குகின்றனா் என்றாா் அவா்.

சாத்தூா் வட்டம் பெத்துரெட்டியபட்டியைச் சோ்ந்த துரைப்பாண்டி (60) கூறியதாவது: சா்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட நான், 10 கி.மீ. தொலைவில் நல்லியில் அமைந்துள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தேன். மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் குறித்த காலத்துக்குள் மருந்துகள் எனது வீடு தேடி வருவதால் வீண் அலைச்சல் தவிா்க்கப்படுகிறது. இதனால் எனது உடல் நலமும், ஆரோக்கியமும் பாதுகாக்கப்படுவதாக உணா்கிறேன் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com