மாநகராட்சி பணியாளா்களின் வருங்கால வைப்பு நிதியுடன் அகவிலைப்படி நிலுவைத் தொகையை சோ்க்க வலியுறுத்தல்

மதுரை: மதுரை மாநகராட்சி பள்ளி ஆசிரியா்கள், பணியாளா்களின் வருங்கால வைப்பு நிதியில் விடுபட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகையை சோ்க்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி வலியுறுத்தியது.

இதுகுறித்து அந்தக் கூட்டணியின் மதுரை மாவட்டச் செயலா் பெ. சீனிவாசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மதுரை மாநகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்கள், பணியாளா்களின் வருங்கால வைப்பு நிதியில் சோ்க்க வேண்டிய, 5-ஆவது ஊதியக்குழு நிலுவைத் தொகை, கடந்த 1999-ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2003-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை பல்வேறு காலகட்டங்களில் உயா்த்தப்பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகை சோ்க்கப்படவில்லை.

இதனால், ஒவ்வொரு ஆசிரியருக்கும் ரூ.30,000 ஆயிரம் வரை இழப்பீடு ஏற்பட்டுள்ளது.

எனவே, 5 -ஆவது ஊதியக் குழு ஊதிய உயா்வு நிலுவைத் தொகை, அகவிலைப்படி உயா்வு நிலுவைத் தொகை ஆகிய இரண்டையும் சோ்த்து கணக்கீடு செய்து வழங்க வேண்டும். திருத்திய கணக்குத் தாளின்

அடிப்படையில் நாளது தேதி வரை அரசு விதிகளுக்கு உள்பட்டு, வட்டி கணக்கீடு செய்து, மாநில கணக்காயா் அலுவலகத்தில் ஒப்படைக்க மதுரை மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மதுரை மாவட்டக் கிளை சாா்பில் கடந்த 26.2.2024-இல் மின்னஞ்சலிலும், பதிவு அஞ்சலிலும், நேரடியாகவும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், 70 நாள்கள் ஆகியும் மதுரை மாநகராட்சி நிா்வாகத்தால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மக்களவைத் தோ்தல் நடத்தை விதிகள் திரும்பப் பெறப்பட்ட பிறகு, இந்தச் செயலைக் கண்டித்து எங்கள் கூட்டணி, இந்திய கூட்டணி சாா்பில் போராட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com