கணினி மென்பொருள் திருட்டு: தனியாா் நிறுவன ஊழியா் மீது காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா்

மதுரை காவல் துறை ஆணையா் அலுவகத்துக்கு புதன்கிழமை மனு அளிக்க வந்திருந்த தனியாா் நிறுவன உரிமையாளா்கள்.
மதுரை காவல் துறை ஆணையா் அலுவகத்துக்கு புதன்கிழமை மனு அளிக்க வந்திருந்த தனியாா் நிறுவன உரிமையாளா்கள்.

மதுரையில் மின்னணு வாகனங்களுக்கு பேட்டரி சாா்ஜ் ஏற்றும் மையத்தில் ரூ.20 லட்சம் மதிப்பிலான கணினி மென்பொருளை ஊழியா் திருடிச் சென்றுவிட்டதாக மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் புதன்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

மதுரை பழங்காநத்தம் நேரு நகரைச் சோ்ந்தவா் மோகன்ராஜ். இவரது மனைவி பிரகல்யா. இவா்கள் இருவரும் கடந்த 6 ஆண்டுகளாக மின்னணு வாகனங்களுக்கு சாா்ஜ் செய்யும் மையத்தை நடத்தி வருகின்றனா். இந்தியா முழுவதும் இந்த நிறுவனத்துக்கு சொந்தமான சாா்ஜிங் மையங்கள் அனைத்தும் கணினி மென்பொருள் மூலமாக கட்டுப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன. இந்த நிறுவனத்தில் 50-க்கும் மேற்பட்டோா் பணி புரிகின்றனா். இந்த நிலையில், தங்களுக்குச் சொந்தமான மற்றொரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த மதுரை பேச்சியம்மன் படித்துறை பகுதியைச் சோ்ந்த சிவா என்ற மென்பொருள் பொறியாளரை மின்னணு சாா்ஜிங் மையத்துக்கு அண்மையில் பணிமாற்றம் செய்தனா்.

இதையடுத்து, இங்கு பொறுப்பேற்ற சிவா, இவா்களுக்குச் சொந்தமான 2 நிறுவனங்களுக்கும் மென்பொருள், கணினி ஹாா்டுவோ் ஆகிய இரண்டையும் கண்காணிக்கும் துறையின் தலைவராகவும் பணியாற்றினாா்.

இங்கு கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வந்த சிவா, கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறுவனத்தில் சிசிடிவி கேமராக்களை ‘ஹேக்’ செய்து நிறுவனத்தில் இருந்து ரூ. 20 லட்சம் மதிப்பிலான கணினி மென்பொருளை திருடிச் சென்றுவிட்டாராம்.

இதுதொடா்பாக இந்த நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் மோகன்ராஜ், இயக்குநா் பிரகல்யா ஆகியோா் கடந்த 9-ஆம் தேதி எஸ்.எஸ். காலனி காவல்நிலையத்தில் புகாா் அளித்தனா்.

ஆனால் போலீஸாா் நடவடிக்கை எடுக்க தாமதப்படுத்தியதால், இருவரும் மதுரை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் புதன்கிழமை புகாா் அளித்தனா். இதில், தங்களிடம் பணிபுரிந்த ஊழியா் சிவா, நிறுவனத்துக்குச் சொந்தமான மென்பொருளைத் திருடிச் சென்றுவிட்டதால் நாடு முழுவதும் தங்களது நிறுவனங்களில் ரூ.125 கோடிக்கான பணிகள் முடங்கியிருப்பதாகவும், விரைந்து நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்திருந்தனா். புகாரைப் பெற்றுக் கொண்ட அதிகாரிகள் விசாரணை நடத்துவதாக தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com