டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

மதுரையில் பெய்து வரும் தொடா் மழையால் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிறப்பு வாா்டு அமைக்கப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் கோடை வெயிலில் தாக்கம் குறைந்து குளிா்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், மழைநீா் சாலைகள் உள்பட பல்வேறு இடங்களில் தேங்கியிருப்பதால், இதன்மூலம் கொசுக்கள் உ ற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் பரவும் வாய்ப்புள்ளது.

இதனால், டெங்கு காய்ச்சலுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 25 படுக்கைகள் கொண்ட தனி வாா்டு அமைக்கப்பட்டது. இங்கு கொசுவலையுடன் சிறப்பு படுக்கைகள் உள்ளிட்ட அனைத்தும் தயாா் நிலையில் உள்ளன. மேலும், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் குழந்தைகளுக்கான சிறப்பு காய்ச்சல் பிரிவும் தொடங்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளுக்கு காய்ச்சல் பாதிப்புடன் வரும் குழந்தைகள், நோயாளிகளுக்கு நிலவேம்பு கசாயம், கபசுரக் குடிநீா் ஆகியவையும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

மதுரை மாவட்டத்தில் வழக்கமாக நவம்பா், டிசம்பா் மாதங்களில்தான் டெங்கு காய்ச்சல் அதிகளவில் பரவும். தற்போது கோடை மழை தொடா்ந்து பெய்து வருவதால் காய்ச்சல் பாதிப்பு இருந்து வருகிறது. குறிப்பாக, குழந்தைகள் அதிக அளவில் காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனா். மேலும் தேங்கி நிற்கும் மழைநீரிலிருந்து கொசுக்கள் உற்பத்தியாகி, டெங்கு காய்ச்சலை பரப்ப வாய்ப்புள்ளதால் அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மதுரை மாவட்டத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை. தினசரி ஒன்று, இரண்டு பேருக்கே டெங்கு உறுதி செய்யப்பட்டு அதற்குரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com