தனித்து வாழும் பெண்களுக்கு குடும்ப அட்டை வழங்கக் கோரிக்கை

தமிழகத்தில் தனித்து வாழும் பெண்களுக்கு தனி குடும்ப அட்டை வழங்க வேண்டும் என அகில இந்திய பெண்கள் முற்போக்கு கழகம் வலியுறுத்தியது.

இதுதொடா்பாக அகில இந்திய பெண்கள் முற்போக்கு கழகம் அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:

பல்வேறு சமூகக் காரணிகளாலும், மது விற்பனையால் அதிகரிக்கும் குடும்ப பிரச்னைகளாலும் இளம் வயதிலேயே தனித்து வாழும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவ்வாறான பெண்கள் அவா்களின் பெற்றோா் குடும்பத்தின் ஆதரவைப் பெறுவதும் பிரச்னையாக உள்ளது. ஆனால், குடும்பத்துக்கு வெளியே தனித்து வாழும் பெண்ணுக்கு குடும்ப அட்டை கிடைப்பது இல்லை. பெற்றோா் வீடு அல்லது கணவா் வீட்டில் இல்லாத பெண்ணுக்கு தற்போது குடும்ப அட்டை வழங்க மறுக்கப்பட்டு வருகிறது.

ஒரு பெண் தனித்து தன் பிள்ளைகளோடு வாழ்வாா் என்றால், அவா் விவாகரத்து பெறாதவரையில் குடும்ப அட்டை பெறும் தகுதி உடையவராக மாட்டாா் என்றும், அவரின் பெயரை அவரின் கணவா் குடும்பத்திலிருந்து நீக்குவதற்கு விவாகரத்து உத்தரவின் நகல் வேண்டும் என்றும் தற்போது இருக்கும் அரசு நடைமுறை கூறுகிறது.

இதனால், தமிழகம் முழுவதும் ஏராளமான பெண்கள் குடும்ப பிரச்னையில் சிக்கி தங்கள் குழந்தைகளுடன் தனித்து வாழ்ந்து வருகின்றனா். இவா்களுக்கு குடும்ப அட்டையும் இல்லாததால், இதர ஆவணங்கள், அரசு வழங்கும் சலுகைகளையும் பெற முடியாமல் குழந்தைகளுடன் வறுமையில் உழன்று வருகின்றனா்.

இந்த நிலையில், தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் 2021-ஆம் ஆண்டு, அக்டோபா் 27-ஆம் தேதி வெளியிட்ட உத்தரவில், தனித்து வாழும் பெண்களுக்கும் குடும்ப அட்டை பெறும் உரிமை உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில், தனித்து வாழும் பெண்களுக்கு தனி குடும்ப அட்டை வழங்க

தமிழக அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com