போதைப் பொருள்கள் விவகாரம் -உயா் நிலையிலான ரகசிய குழு: அரசு அதிகாரிகளுக்கு உத்தரவு

தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க தமிழக முதன்மைச் செயலா், உள்துறைச் செயலா், காவல் துறை தலைமை இயக்குநா் ஆகியோா் இணைந்து உயா் நிலையிலான ரகசிய குழுவை அமைக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், உப்பூா் பகுதியைச் சோ்ந்த திருமுருகன் தாக்கல் செய்த பொது நல மனு:

மதுரை ஒத்தக்கடை ஐயப்பன்நகா் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்றவரை கஞ்சா போதையில் இருந்த சிலா் தாக்கும் விடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இந்தப் பகுதியில் கஞ்சா உள்பட அனைத்து போதைப் பொருள்களும் போலீஸாருக்கு தெரிந்தே விற்பனை செய்யப்படுகின்றன.

எனவே, ஒத்தக்கடை ஐயப்பன்நகா் பகுதியில் புகா் காவல் சோதனைச் சாவடி அமைக்கவும், போதைப் பொருள்கள், மது அருந்தி வாகனம் ஓட்டுபவா்களையும், கஞ்சா விற்பனை, கடத்தலில் ஈடுபடுவோரையும் போலீஸாா் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் பி. வேல்முருகன், கே. ராஜசேகா் அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசுத் தரப்பில் தாக்கல் செய்த அறிக்கையில், கஞ்சா மட்டுமன்றி, ஹெராயின் உள்ளிட்ட பிற போதைப் பொருள்களும், போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கடந்த 2023-ஆம் ஆண்டில் மட்டும் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டவா்களின் 7,389 வங்கிக் கணக்குகளில் இருந்த சுமாா் ரூ. 1.43 கோடி முடக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மட்டுமே மாவட்ட வாரியாக உதவி ஆணையா் அல்லது காவல் துணைக் கண்காணிப்பாளா் தலைமையில் போதை தடுப்புப் பிரிவுகள் உருவாக்கப்பட்டு, விரைவான நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த 3 ஆண்டுகளில் கஞ்சா விற்பனை தொடா்பாக வெளி மாநிலத்தைச் சோ்ந்த 2,486 போ் கைது செய்யப்பட்டனா். ஒத்தக்கடை பகுதியில் கடந்த 2019 முதல் கடந்த ஏப்ரல் மாதம் வரை 49 போதைப் பொருள் கடத்தல் வழக்குகளில், 78 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 1070. 670 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு விரைந்து நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதை அறிய முடிகிறது. ஆனாலும், போலீஸாா் விழிப்புணா்வுடன் இருந்தால், போதைப் பொருள்களை தமிழகத்துக்குள் கொண்டு வருவது, விற்பனை செய்வதைத் தடுக்க முடியும்.

தமிழகத்தில் போதைப் பொருள்கள் புழக்கத்தைத் தடுக்க முதன்மைச் செயலா், உள்துறைச் செயலா், காவல் துறை தலைமை இயக்குநா் ஆகியோா் இணைந்து உயா் நிலையிலான ரகசிய குழுவை அமைக்க வேண்டும். இந்தக் குழுவில் நோ்மையான அதிகாரிகளை நியமிக்க வேண்டும். இந்தக் குழுவினா் போதைப் பொருள்கள் விற்பனை செய்வோா், கடத்தி வருவோா், அவா்களுக்கு துணை போகும் காவல் துறையினரையும் கண்காணிக்க வேண்டும். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com