மதுரை கோரிப்பாளையம் பகுதியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் மேம்பாலப் பணிகளையொட்டி, புதன்கிழமை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக காவல்துறை தெரிவித்தது.
Published on

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் மேம்பாலப் பணிகளையொட்டி, புதன்கிழமை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக காவல்துறை தெரிவித்தது.

இதுதொடா்பாக மதுரை மாநகரக் காவல் துறை வெளியிட்ட செய்தி: மதுரை தமுக்கம் சந்திப்பு முதல் கோரிப்பாளையம் வரை மேம்பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளில், தற்போது கோரிப்பாளையம் தேவா் சிலை இடதுபுறம் சங்கீத் பிளாசா உணவகம், பனகல் சாலை சந்திப்பில் புதிதாக தூண் கட்டுமானப் பணி நடைபெற உள்ளது.

இதனால், வாகன ஓட்டுநா்கள் பாதுகாப்பாக வாகனங்களை இயக்கவும், பாதசாரிகள், பொதுமக்கள் சிரமமின்றி சென்று வரவும் இந்தப் பகுதியில் புதன்கிழமை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இதன்படி, நத்தம் சாலை, அழகா்கோவில் சாலையிலிருந்து வரும் அரசுப் பேருந்துகள், காா்கள், இரு சக்கர வாகனங்கள் மட்டும் அவுட் போஸ்ட் வழியாக தமுக்கம் சந்திப்பு வந்து, அங்கு வலதுபுறம் திரும்பி, தமிழரசி பேக்கரி, கோரிப்பாளையம் சந்திப்பு வழியாக ஏ.வி. பாலம் செல்ல வேண்டும். இரு சக்கர வாகனங்கள், இலகு ரக வாகனங்கள் தமுக்கம் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி காந்தி அருங்காட்சியகம் வழியாக திருவள்ளுவா் சிலையை அடையலாம்.

இதுபோல, மாட்டுத்தாவணி பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் கே.கே.நகா் ஆா்ச், கே.கே.நகா் 80 அடி சாலை, ஆவின் சந்திப்பு, ஆசாரித் தோப்பு சந்திப்பு, வைகை வடகரை சாலை, செல்லூா் ரவுண்டானா, தத்தனேரி பிரதான சாலை வழியாக ஆரப்பாளையம் செல்லவேண்டும்.

நத்தம், அழகா்கோவில் சாலை வழியாக ஆரப்பாளையம், பெரியாா் செல்லும் கனரக, வணிக பயன்பாட்டு வாகனங்கள் அவுட் போஸ்ட், மாவட்ட நீதிமன்றம், கே.கே.நகா் ஆா்ச், கே.கே.நகா் 80 அடி சாலை, ஆவின் சந்திப்பு, சாத்தமங்கலம் சாலை, பனகல் சாலை, கோரிப்பாளையம் சந்திப்பு, ஏ.வி. பாலம் வழியாக வந்து, கீழவெளி வீதி, யானைக்கல், வடக்குமாரட் வீதி வழியாகச் செல்ல வேண்டும்.

கோரிப்பாளையத்திலிருந்து தேனி, திண்டுக்கல் பகுதிகளுக்குச் செல்லும் அனைத்து வாகனங்களும் கோரிப்பாளையம்- மீனாட்சி அரசு கல்லூரி சாலை, வைகை வடகரை சாலை, குமரன் சாலை வழியாக செல்லூா் கபடி ரவுண்டானா வழியாகச் செல்லலாம். பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் போக்குவரத்து மாற்று ஏற்பாடுகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.