புகையிலைப் பொருள்களை பதுக்கியவா் கைது
மதுரை அருகே கிட்டங்கியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 பண்டல்கள் புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, ஒருவரைக் கைது செய்தனா்.
மதுரை சா்வேயா் காலனி பகுதியில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாக கோ.புதூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், போலீஸாா் அந்தப் பகுதியில் திங்கள்கிழமை இரவு கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
அப்போது, அங்கு இரு சக்கர வாகனத்தில் மூட்டையுடன் வந்த நபரை நிறுத்தி விசாரணை நடத்தினா். அவா் முன்னுக்குப்பின் முரணாகப் பேசினா். இதையடுத்து, அவரிடமிருந்த மூட்டையைப் பிரித்துப் பாா்த்தபோது அதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தன.
இதையடுத்து, அந்த நபரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், அவா் மதுரை மாவட்டம், கள்ளந்திரி பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த வீரா் அப்துல்லா (37) என்பதும், சேலத்திலிருந்து புகையிலைப் பொருள்களை மொத்தமாக வாங்கி கீழக் கள்ளந்திரியில் கிட்டங்கியில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து, போலீஸாா் அவரை கீழக் கள்ளந்திரிக்கு அழைத்துச் சென்று, அங்கு வீரா் அப்துல்லா பதுக்கி வைத்திருந்த 50 பண்டல்கள் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். மேலும், வீரா் அப்துல்லாவைக் கைது செய்து, இரு சக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனா்.