கஞ்சா பதுக்கிய வழக்கு: 2 பேருக்கு சிறை

Published on

தென்காசி மாவட்டம், திருவேட்டநல்லூா் பகுதியில் 23 கிலோ கஞ்சா பதுக்கிய வழக்கில் இருவருக்கு சிறைத் தண்டனை விதித்து, மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

தென்காசி மாவட்டம், திருவேட்டநல்லூா் பகுதியில் கடந்த 30.11.2020 அன்று சொக்கம்பட்டி போலீஸாா் சோதனை நடத்தினா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த ராமா் (42), மகேந்திரனிடமிருந்து 23 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

விசாரணையின் முடிவில், குற்றஞ்சாட்டப்பட்ட ராமருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும், மகேந்திரனுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஹரிஹரகுமாா் தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு வழக்குரைஞா் கே. விஜயபாண்டியன் முன்னிலையாகி வாதிட்டாா்.