மதுரை பாத்திமா கல்லூரி- சமயநல்லூா் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் குறித்து வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்ட சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதிகள் எம். எஸ். ரமேஷ், ஏ.டி.மரிய கிளாட் உள்ளிட்டோா். ~மதுரை பாத்திமா கல்லூரி- சமயநல்லூா் சாலையில்
மதுரை பாத்திமா கல்லூரி- சமயநல்லூா் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் குறித்து வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்ட சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதிகள் எம். எஸ். ரமேஷ், ஏ.டி.மரிய கிளாட் உள்ளிட்டோா். ~மதுரை பாத்திமா கல்லூரி- சமயநல்லூா் சாலையில்

சமயநல்லூா் சாலையில் உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆய்வு

Published on

மதுரை பாத்திமா கல்லூரி முதல் சமயநல்லூா் வரை சாலையின் இருபுறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றம் குறித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், ஏ.டி. மரிய கிளாட் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டனா்.

பாத்திமா கல்லூரி முதல் சமயநல்லூா் வரையிலான 8 கி.மீ. தொலைவு உள்ள இந்த சாலையில் பல்வேறு நிறுவனங்கள், வணிக வளாகங்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளன. இதன் காரணமாக, அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

இதுகுறித்து பரவை பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவது மட்டுமன்றி, விபத்துகளைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அண்மையில் உத்தரவிட்டது.

மேலும், பாத்திமா கல்லூரி முதல் சமயநல்லூா் வரையிலான சாலையை வெள்ளிக்கிழமை(நவ. 29) நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனா். இதன்படி, மதுரை மாநகராட்சி நிா்வாகம், மாநில நெடுஞ்சாலைத் துறை, காவல் துறை ஆகிய துறைகள் சாா்பில் பாத்திமா கல்லூரி முதல் சமயநல்லூா் வரை சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மேலும், தேவையான இடங்களில் ஒளிரும் வில்லைகள் பொருத்தப்பட்டன.

இதையடுத்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதிகள் எம். எஸ். ரமேஷ், ஏ.டி. மரிய கிளாட் ஆகியோா் நேரில் ஆய்வு மேற்கொண்டனா். பாத்திமா கல்லூரி முதல் பரவை வரை இரு புறங்களிலும் ஆய்வு மேற்கொண்ட நீதிபதிகள், வாகனங்கள் எளிதாக சென்று திரும்பும் வகையில் சாலையை அகலப்படுத்த வேண்டும். இணைப்புச் சாலை, இரு சாலைகள் சந்திக்கும் இடங்களில் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் சாா்பில் உயா்கோபுர மின் விளக்குகள் அமைக்க வேண்டும். விபத்துகள் நிகழாமல் இருக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினா்.

இந்த ஆய்வின் போது அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞா் வீராராகவன், நெடுஞ்சாலைத் துறை மதுரைக் கோட்டப் பொறியாளா் மோகனகாந்தி, உதவி செயற்பொறியாளா் எஸ்.ஜி.ஆனந்த், உதவி பொறியாளா் சக்திவேல், மாநகராட்சி அலுவலா்கள், பரவை பேரூராட்சி அலுவலா்கள், காவல் துறையினா், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.