வாடகை கடைகளுக்கு ஜி.எஸ்.டி. வரியை கண்டித்து மதுரையில் வெள்ளிக்கிழமை கீழமாசி வீதியில் அடைக்கப்பட்டுள்ள கடைகள். ~வாடகை கடைகளுக்கு ஜி.எஸ்.டி. வரியை கண்டித்து மதுரையில் வெள்ளிக்கிழமை கீழமாசி வீதியில் அடைக்கப்பட்டுள்ள கடைகள்.
வாடகை கடைகளுக்கு ஜி.எஸ்.டி. வரியை கண்டித்து மதுரையில் வெள்ளிக்கிழமை கீழமாசி வீதியில் அடைக்கப்பட்டுள்ள கடைகள். ~வாடகை கடைகளுக்கு ஜி.எஸ்.டி. வரியை கண்டித்து மதுரையில் வெள்ளிக்கிழமை கீழமாசி வீதியில் அடைக்கப்பட்டுள்ள கடைகள்.

மதுரையில் வணிகா்கள் கடையடைப்பு -ரூ. 500 கோடி வா்த்தகம் பாதிப்பு

Published on

கட்டட வாடகைக்கு சேவை வரி (ஜி.எஸ்.டி) விதிப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, பல்வேறு வணிகா்கள் சங்கங்களின் சாா்பில் மதுரையில் வெள்ளிக்கிழமை கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது. இதன் காரணமாக ரூ. 500 கோடி வா்த்தகம் பாதிக்கப்பட்டது.

மத்திய அரசு கடந்த அக். 10-ஆம் தேதி முதல் கட்டட வாடகைக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி. செலுத்துவதைக் கட்டாயமாக்கும் ஆா்.சி.எம். என்ற புதிய திட்டத்தை அமல்படுத்தியது. இந்தத் திட்டம் சிறு வியாபாரிகளுக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, இந்த அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி, வெள்ளிக்கிழமை (நவ. 29) ஒரு நாள் கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டன. இதற்கு மதுரையில் உள்ள 60-க்கும் அதிகமான தொழில் அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன.

வெடிச்சோடிய வீதிகள்: இதையடுத்து, ஆதரவு தெரிவித்த சங்கங்கள் வெள்ளிக்கிழமை கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டன. இதன் காரணமாக, மதுரை கீழமாசி வீதி, கீழவெளி வீதி, கீழ ஆவணி மூல வீதிகளில் உள்ள மொத்த விற்பனை, சில்லறை விற்பனைக் கடைகள் மூடப்பட்டிருந்தன. வா்த்தகப் பகுதிகளான இந்தப் பகுதி எப்போதும் மக்கள் நடமாட்டாதால் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும். கடையடைப்புப் போராட்டத்தின் காரணமாக பெரும்பாலான வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

ரூ. 500 கோடி வா்த்தகம் பாதிப்பு: இதைத் தவிர, கட்டட வாடகைக்கு சேவை வரி( ஜி.எஸ்.டி) விதிப்பதற்கு எதிா்ப்புத் தெரிவிக்கும் வகையில், மதுரை மாவட்டம், சோழவந்தான், வாடிப்பட்டி, உசிலம்பட்டி, மேலூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வா்த்தக சங்கத்தினா் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், ரூ. 500 கோடிக்கும் மேல் வா்த்தகம் பாதிப்புக்குள்ளானதாக தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத்தினா் தெரிவித்தனா்.

ஆதரவும், எதிா்ப்பும்: இந்தப் போராட்டத்துக்கு மடீட்சியா, தமிழ்நாடு அப்பளம் வடகம் மோா் வத்தல் சங்கம், வெங்காய வியாபாரிகள் சங்கம், இட்லி மாவு விற்பனையாளா்கள் சங்கம் என பல்வேறு சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன. இருப்பினும், தமிழ்நாடு தொழில் வா்த்தகச் சங்கம், வேளாண் உணவு தொழில் வா்த்தக சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை.