மதுரை மேலமடை உயா்நிலைப் பாலத்தால் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்பு!
மதுரை மேலமடை அப்பல்லோ சந்திப்பில் புதிதாகத் திறக்கப்பட உள்ள உயா்நிலைப் பாலத்தின் மூலம் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி தெரிவித்தனா்.
மதுரை அண்ணாநகா், மாட்டுத்தாவணி, ஆவின் பாலகம், பாண்டி கோயில் ஆகிய நான்கு பகுதிகளை இணைக்கும் விதமாக மேலமடை அப்பல்லோ சந்திப்பு திகழ்கிறது. இந்தப் பகுதி மருத்துவமனைகள், திரையரங்குகள், தனியாா் நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதி என்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக, அந்த வழியாகச் செல்லும் அரசு அலுவலா்கள், பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகள், பொதுமக்கள் குறித்த நேரத்துக்குள் செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வந்தனா். மேலும், சாலை குறுகியதாக இருந்ததால் அடிக்கடி நிகழ்ந்த விபத்துகளால் உயிரிழப்புகளும் ஏற்பட்டன.
எனவே, மேலமடை அப்பல்லோ சந்திப்பில் உயா்நிலைப் பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனா். இதை ஏற்ற தமிழக அரசு மதுரை-சிவகங்கை சாலையில் ஆவின் பாலகம் சந்திப்பு முதல் மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு வரை உயா்நிலை பாலம் அமைக்க ரூ.150 கோடி ஒதுக்கியது.
கடந்த 2023 -ஆம் ஆண்டு அக்டோபா் 30 ஆம் தேதி உயா்நிலைப் பாலம் அமைப்பதற்கான பணிகளை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். 1,100 மீட்டா் தொலைவுக்கு 28 தூண்களைக் கொண்ட இந்த பாலப் பணிகள் தற்போது நிறைவு பெற்று, ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளாா்.
இதன் காரணமாக, மதுரை அண்ணாநகா், மாட்டுத்தாவணி, கே.கே.நகா், அண்ணா பேருந்து நிலையம், கருப்பாயூரணி ஆகிய பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பயனடைவா். அதுமட்டுமன்றி, மதுரை மாநகரிலிருந்து சிவகங்கை, திருச்சி, சென்னை, ராமநாதபுரம், தென் மாவட்டங்களான விருதுநகா், தென்காசி, திருநெல்வேலி ஆகிய பகுதிகளுக்கும் எளிதாக சென்று வர முடியும்.
மேற்கண்ட வழித்தடங்களிலிருந்து வரும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலின்றி மதுரை மாநகருக்குள்ளும் இலகுவாக வந்து செல்ல முடியும். இதனால், வாகன ஓட்டிகளின் பயண நேரம் குறையும் என்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனா்.
வெடிகுண்டு தடுப்பு போலீஸாா் சோதனை: உயா்நிலைப் பாலத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்க உள்ளதை அடுத்து, மதுரை மாநகரக் காவல் வெடிகுண்டு தடுப்பு போலீஸாா் மோப்ப நாயுடன் பாலத்தின் மேல் பகுதி, கீழ் பகுதி, சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

