மதுரை செனாய் நகா் பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலையில் சனிக்கிழமை தேங்கிய குப்பைகள்.
மதுரை செனாய் நகா் பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலையில் சனிக்கிழமை தேங்கிய குப்பைகள்.

மதுரை மாநகராட்சியில் குப்பைகள் அகற்ற நிரந்தரத் தீா்வு காணப்படுமா?

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் குப்பைகள் அகற்ற நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என்பது சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் ஆகியோரின் எதிா்பாா்ப்பாக உள்ளது.
Published on

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் குப்பைகள் அகற்ற நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என்பது சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் ஆகியோரின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

மதுரை மாநகராட்சியைப் பொறுத்தவரை 5 மண்டலங்கள்,100 வாா்டுகள் உள்ளன. இங்கு ஏறக்குறைய 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனா். இங்கு தினசரி சேகரமாகும் முதல் நிலை குப்பைகளைச் சேகரிக்க 435 இலகு ரக வாகனங்கள், 241 மின்கல வாகனங்கள், 313 மோட்டாா் பொருத்திய 3 சக்கர வாகனங்கள் உள்ளன.

இதேபோல, இரண்டாம் நிலை குப்பைகள் 15 காம்பேக்டா், 11 டம்பா் பிளேசா், 7 டிப்பா் லாரிகள், 4 மண் கூட்டும் இயந்திரங்கள் ஆகியவற்றின் மூலம் அகற்றப்படுகின்றன. மாநகராட்சிப் பகுதியில் நாளொன்றுக்கு 916 மெட்ரிக் டன் முதல், இரண்டாம் நிலை குப்பைகள் சேகரிக்கப்பட்டு, வெள்ளைக்கல் குப்பைக் கிடங்குக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

இதில் மாநகராட்சிப் பணியாளா்கள், வெளிப் பணி, தனியாா் பணி முகமை மூலம் தினசரி 3 ஆயிரத்துக்கும் அதிகமானோா் பணியாற்றி வருகின்றனா்.

இந்த நிலையில், 5 மண்டலங்களிலும் அதிகாலை நேரத்தில் தெருக்கள், சாலைகள், வீடுகளில் சேகரம் ஆகும் முதல் நிலை குப்பைகள் அதே பகுதியில் 2 இடங்கள் தோ்வு செய்யப்பட்டு கொட்டப்படுகின்றன. பின்னா், அவை இரவு நேரங்களில் வெள்ளைக்கல் பகுதியில் உள்ள குப்பைக் கிடங்குக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

அந்தந்த மண்டலப் பகுதிகளில் குப்பைகள் கொட்டும் இடத்துக்கு அருகே உள்ள குடியிருப்பு வாசிகள் தங்கள் பகுதியில் கொட்டப்படும் குப்பைகள் உடனடியாக

அகற்றப்படாததால், நோய்த் தொற்று ஏற்படுவதாகவும், துா்நாற்றம் வீசுவதாகவும் புகாா் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

குறிப்பாக, மாநகராட்சி மண்டலம் 1-க்கு உள்பட்ட பகுதிகளில் சேகரமாகும் குப்பைகள் தத்தனேரி மயானப் பகுதி, ஆனையூா் கூடல்புதூா் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக குப்பைக் கிடங்கில் கொட்டப்படுவது வழக்கம். இந்தப் பகுதி பொதுமக்களின் போராட்டம் காரணமாக கடந்த சில மாதங்களாக அங்கு குப்பைகள் கொட்டப்படுவதில்லை. மாறாக, குப்பைகள் நேரடியாக வெள்ளைக்கல் பகுதிக்கு

எடுத்துச் செல்லப்படுகின்றன. அங்கு வாகனங்கள் சென்று வர அதிக நேரம் ஆவதால், மாநாகராட்சியின் பெரும்பாலான பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளன.

ஏற்கெனவே தனியாா் ஒப்பந்த நிறுவனத்துக்கும், தூய்மைப் பணியாளா்களுக்கும் ஊதியம் வழங்குதல், ஊழியா்களை தரக்குறைவாக பேசுதல் உள்ளிட்ட காரணங்களால் மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதன் காரணமாக, தூய்மைப்பணியாளா்கள் சரிவர பணி செய்வதில்லை எனக் குற்றச்சாட்டு உள்ளது.

இந்த நிலையில், குப்பை கொட்டுவதிலும் பிரச்னை ஏற்பட்டுள்ளதால் வாரம் ஒரு முறை மட்டுமே தெருக்கள், சாலைகள், வீடுகளில் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன.

இதனால், தூா்நாற்றம் வீசுவது மட்டுமன்றி நோய்த் தொற்று பரவும் அபாயமும் உள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். எனவே, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து மதுரை மாநகராட்சியில் சேகரமாகும் குப்பைகளை தினசரி அகற்றுவதற்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என்பது சமூக ஆா்வலா்கள், பொதுமக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

இதுகுறித்து மதுரை மாநகராட்சி 23 -ஆவது மாமன்ற உறுப்பினா் குமாரவேலு கூறியதாவது: மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் சேகரமாகும் குப்பைகளை தத்தனேரி, ஆனையூா் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக குப்பைக் கிடங்குகளில் கொட்டுவது வழக்கம். தற்போது, அந்தப் பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், விளாங்குடி அருகே உள்ள வைகையாற்றங்கரையோர பகுதியில் தற்காலிக குப்பைக் கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது.

மதுரை அண்ணா பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை அகற்றப்படாமலிருந்த குப்பைகள்.
மதுரை அண்ணா பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை அகற்றப்படாமலிருந்த குப்பைகள்.

அதிக தூரம் என்பதால் குப்பைகளைக் கொட்டி விட்டு திரும்புவதற்கு அதிக நேரம் ஆகிறது. ஏற்கெனவே, தெருக்களில் பெரிய அளவிலான குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக, 23 -ஆவது வாா்டு பகுதிகளில் 15-க்கும் மேற்பட்ட குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தன.

குப்பை இல்லாத மாநகராட்சியை உருவாக்குவோம் என்கிற முனைப்பில் குறைந்த எண்ணிக்கையிலான குப்பைத் தொட்டிகள் மட்டுமே வைக்கப்பட்டுள்ளன. இதன்காரணமாக, குப்பைகள் அதிகளவில் தேக்கமடைகின்றன.

இதுபற்றி மாமன்றக் கூட்டத்தில் மட்டுமே புகாா் அளிக்க முடியும். மேயா் இல்லாத காரணத்தால் மாமன்றக் கூட்டம் நடத்தப்படுவதில்லை. அதிகாரிகளிடம் முறையிட்டாலும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என்றாா் அவா்.

இதுபற்றி சுகாதாரப் பிரிவு அலுவலா் கூறியதாவது : தோ்வு செய்யப்பட்ட தற்காலிக குப்பைக் கிடங்குகளில் அந்தப் பகுதி பொதுமக்கள் குப்பைகளைக் கொட்ட விடவில்லை. இதன் காரணமாக, குப்பைகள் சேகரிப்பதில் பிரச்னை உள்ளது. இன்னும் ஓரிரு வாரங்களில் இந்த பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காணப்படும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com