ஆளுநரிடமிருந்து பட்டம் பெற மறுத்த மாணவியின் செயல் ஏற்புடையதல்ல!
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில், தமிழக ஆளுநரிடமிருந்து பட்டம் பெற மறுத்த மாணவியின் செயல் ஏற்புடையதல்ல என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை தெரிவித்தது.
தூத்துக்குடியைச் சோ்ந்த ராம்குமாா் ஆதித்தியன் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தின் 32 -ஆவது பட்டமளிப்பு விழா 13.8.2025 அன்று நடைபெற்றது. இந்த விழாவில் பல்கலைக்கழக மாணவி ஜீன் ஜோசப், தமிழக ஆளுநா் ஆா்.என். ரவியிடமிருந்து பட்டம் பெறாமல், துணைவேந்தரிடமிருந்து பெற்றுக் கொண்டாா்.
பல்கலைக்கழகத்தின் சட்டப்படி, மாநில ஆளுநா்தான் பல்கலைக்கழகத்தின் வேந்தா். வேந்தா் இல்லாத போது மட்டுமே துணைவேந்தா் பட்டத்தை வழங்க முடியும்.
எனவே, வேந்தரிடம் பட்டம் பெற மறுத்தது சட்ட மீறல். அப்போது, தமிழ்நாட்டுக்கு ஒன்றும் செய்யாத ஆளுநரிடம் நான் ஏன் பட்டம் வாங்க வேண்டும் என அந்த மாணவி பொது வெளியில் கூறி இருக்கிறாா். துணைவேந்தரிடமிருந்து பெற்ற பட்டம் செல்லத்தக்கது அல்ல.
எனவே, அதை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். மேலும், இந்த வழக்கு முடியும் வரை மாணவியின் பட்டம் செல்லுபடியாகும் தன்மைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு விசாரணைக்கு உகந்ததா? இல்லையா? என்பதற்காக உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்காக பட்டியலிடப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநரை அவமதிக்கும் வகையில் மாணவி நடந்து கொண்டது ஏற்புடையதல்ல.
இதற்குரிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும். பல்கலைக்கழகத்தின் மாண்பைக் காக்க வேண்டும். இன்றைய இளைய தலைமுறையினருக்கு உரிய வழிகாட்டுதல் வழங்கப்பட வேண்டும்.
பல்கலைக்கழக விதியில் இதுபோன்று செயல்பட்டவா்களுக்கு துணைவேந்தா் நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளதா? என மனுதாரரும், பல்கலைக்கழக வழக்குரைஞரும் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை வருகிற 18-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
