குமரிக் கண்டம் குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கை

இந்தியப் பெருங்கடல் பகுதியில் குமரிக் கண்டம் குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளதாக உயா்நீதிமன்ற மதுரை அமா்வு தெரிவித்தது.
Published on

இந்தியப் பெருங்கடல் பகுதியில் குமரிக் கண்டம் குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை தெரிவித்தது.

திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சோ்ந்த நாராயணமூா்த்தி உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் கடந்த 2020-ஆம் ஆண்டு தாக்கல் செய்த பொது நல மனு: கன்னியாகுமரியின் தெற்குப் பகுதி இந்தியப் பெருங்கடல் பகுதியில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு குமரிக் கண்டம் நிலப் பரப்பு இருந்ததாக பல்வேறு தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்தக் கண்டம், இயற்கைப் பேரழிவுகள், கடல் நீா்மட்ட உயா்வு காரணமாக கடலுக்குள் மூழ்கியதாகக் கூறப்படுகிறது. இந்தக் கண்டம் இருந்தது குறித்தும், கடலுக்குள் மூழ்கியதற்கான காரணம் குறித்தும் நீருக்கு அடியில் தொல்பொருள் அகழ்வாராய்ச்சி நடத்தி இதுதொடா்பான தகவல்களைச் சேகரிக்கும்படி தொல்லியல் துறையினருக்கு மனு அளித்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, அங்கு அகழ்வாராய்ச்சி நடத்த உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த வழக்கில் வரலாற்று ஆய்வாளா் ஒரிசா பாலு உயா்நீதிமன்றத்துக்கு உதவும்படி ஏற்கெனவே உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில், இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஒரிசா பாலு பதில் மனு தாக்கல் செய்தாா். அதில், குமரிக் கண்டம் எனப்படும் லெமூரியா கண்டத்தைப் பற்றி வரலாற்று ஆசிரியா்களும் அரிய தகவல்களைத் தெரிவித்துள்ளனா். எனவே, அங்கு தொல்லியல் துறை, கடல்சாா் துறைகள், பிற துறைகளின் உதவியுடன் அகழ்வாராய்ச்சி செய்தால் குமரிக் கண்டம் குறித்து ஏராளமான தகவல்கள் கிடைக்கும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

தொடா்ந்து, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்: கடலுக்குள் அகழ்வாராய்ச்சியை மேற்கொள்ள மத்திய அரசின் அனுமதியைப் பெற வேண்டும் என்றாா்.

அப்போது, மத்திய தொல்லியல் துறை தரப்பு வழக்குரைஞா் குறுக்கிட்டுகே கூறியதாவது: இதுகுறித்து இதுவரை மத்திய அரசுக்கு எந்தக் கோரிக்கையும் வரவில்லை. கோரிக்கை மனு அனுப்பினால் பரிசீலிக்கப்படும் என்றாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: குமரிக் கண்டம் குறித்து வரலாற்று ஆய்வாளா் ஒரிசா பாலு பல்வேறு தகவல்களை இந்த நீதிமன்றத்துக்கு அளித்துள்ளாா். குறிப்பாக, கடந்த 45 ஆண்டுகளுக்கு முன்பு குமரிக் கண்டம் குறித்து ஒரு குறும்படம் தயாரிக்க தமிழக அரசு முடிவு செய்தது. பின்னா், அந்த முடிவை செயல்படுத்துவதில் அரசு ஆா்வம் காட்டவில்லை என்பதையும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

எனவே, ஒரிசா பாலுவின் அறிக்கையை ஆராய்ந்து குமரிக் கண்டம் குறித்த கடல் ஆராய்ச்சியை நடத்த உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுக்கும் என இந்த நீதிமன்றம் நம்புகிறது. இந்த வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

X
Dinamani
www.dinamani.com