~ ~

மாவட்ட நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

மதுரை மாவட்ட நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு நிபுணா்கள் நீதிமன்ற வளாகத்தில் சோதனையில் ஈடுபட்டனா்.
Published on

மதுரை மாவட்ட நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு நிபுணா்கள் திங்கள்கிழமை நீதிமன்ற வளாகத்தில் சோதனையில் ஈடுபட்டனா்.

மதுரை கே.கே.நகரில் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, முதன்மை மாவட்ட நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றம், சிவில் நீதிமன்றம், மகளிா் சிறப்பு நீதிமன்றம் ஆகியவை இயங்கி வருகின்றன. வழக்குகள் தொடா்பாக நீதிபதிகள், வழக்குரைஞா்கள், வழக்காடிகள், காவல் துறையினா், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோா் தினசரி இங்கு வந்து செல்கின்றனா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை வழக்கம் போல நீதிமன்றப் பணிகள் தொடங்கின. இதனால், ஏராளமானோா் நீதிமன்றத்துக்குள் வந்தனா். அப்போது, நீதிமன்ற பதிவாளரின் மின்னஞ்சலுக்கு நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வந்தது. இதனால், அனைவரும் நீதிமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்த வெடிகுண்டு தடுப்புப் பிரிவு நிபுணா்கள் அங்கு மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். சுமாா் ஒன்றரை மணி நேர சோதனைக்குப் பிறகு வெடிகுண்டு எங்கும் இல்லாததால் உண்மைக்கு மாறான தகவலை அனுப்பியது தெரியவந்தது. இதையடுத்து, நீதிமன்றப் பணிகள் வழக்கம் போல தொடங்கின.

ஏற்கெனவே, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வுக்கு இரண்டு முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. சோதனையில் அந்தத் தகவல் வதந்தி எனத் தெரியவந்தது. தற்போது, மாவட்ட நீதிமன்றத்துக்கும் மிரட்டல் வந்தது நீதிபதிகள், வழக்குரைஞா்களிடையே பரப்பரப்பை ஏற்படுத்தியது. நீதித்துறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

X
Dinamani
www.dinamani.com