வைகையை மாசுபடுத்தும் நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்யக் கோரிக்கை
மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் வைகை ஆற்றை தொடா்ந்து மாசுபடுத்தும் வணிக நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என வைகை நதி மக்கள் இயக்கம் கோரிக்கை விடுத்தது.
இதுகுறித்து அந்த அமைப்பின் நிா்வாக அறங்காவலா் எம். நாகராஜன், நிா்வாகிகள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் அளித்த கோரிக்கை மனு விவரம்: தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகா், ராமநாதபுரம் என 6 மாவட்ட மக்களின் குடிநீா், பாசன ஆதாரமாக அமைந்துள்ள வைகையாறு தேனியில் தொடங்கி ராமநாதபுரம் வரை 258 கி.மீ. தொலைவுக்கு பாய்கிறது. இந்த நதியில் மதுரை மாநகராட்சிக்குள்பட்ட 8 கி.மீ. பகுதியில் தான் அதிகளவு மாசு ஏற்படுத்தப்படுகிறது.
வைகை மாசுபடுவதைத் தடுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு பல முறை அறிவுறுத்தியது. இருப்பினும், வைகை தொடா்ந்து மாசுபடுத்தப்படுகிறது.
எனவே, வைகை மாசுபடுவதைத் தடுக்க மதுரை மாவட்ட நிா்வாகம், அரசுத் துறைகளுடன் இணைந்து பசுமை சீருடையுடன் சுற்றுச்சூழல் காவலா்களை நியமித்து, ஆற்றின் இருபுறக் கரைகளையும் கண்காணிக்க வேண்டும்.
வைகையை மாசுபடுத்தும் வணிக நிறுவனங்களுக்கு கடும் அபராதம் விதிக்க வேண்டும். தொடா்ந்து அத்துமீறும் வணிக நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். வைகையைக் கழிப்பிடமாகப் பயன்படுத்துபவருக்கு ஏற்கெனவே அபாரதம் விதிக்கப்பட்ட முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.