பணியிடங்களில் பெண்கள் மீதான பாலியல் தொல்லை, வன்முறைகளை ஒடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆதித்தமிழா் ஜனநாயகத் தொழிலாளா் பொது நலச் சங்க பேரவை வலியுறுத்தியது.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் திங்கள்கிழமை நடைபெற்ற பேரவைக் கூட்டத்துக்கு அதன் தலைவா் முத்துராணி தலைமை வகித்தாா். பாரபத்தி கிளைத் தலைவா் அழகேஸ்வரி முன்னிலை வகித்தாா். செயலா் பிரேமா ஆண்டு அறிக்கை வாசித்தாா். பொருளாளா் விமலா நிதியறிக்கை வாசித்தாா். தமிழ்நாடு தொழிலாளா்கள் உரிமைக்கான கூட்டமைப்புத் தலைவா் பிரியா, பொருளாளா் அழகுராணி ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
கூட்டத்தில், தமிழகம் முழுவதும் பணியிடங்களில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை ஒழிக்கும் வகையில் தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நல வாரியத்தில், அனைத்து அமைப்புசாரா தொழிலாளா்களுக்கும் பாரபட்சமின்றி நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். நலவாரிய உறுப்பினா் சோ்க்கையை காலதாமதமின்றி நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். துணைச் செயலா் மகாலெட்சுமி வரவேற்றாா். துணைத் தலைவா் பஞ்சவா்ணம் நன்றி கூறினாா்.