அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: விசாரணை நடத்தக் கோரிக்கை
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடா்பாக உரிய விசாரணை நடத்தி, குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியா் கழகத்தின் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்தச் சங்கத்தின் மதுரை மாவட்டக் கிளை பொதுக் குழுக் கூட்டம் மூட்டா அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு பேராசிரியா் ராமமூா்த்தி தலைமை வகித்தாா்.
இதில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி, குற்றவாளிக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும். 8-ஆவது ஊதியக் குழுவை அமைக்க அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும், ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் உள்ளதைப் போல, ஓய்வூதிய பிடித்த தொகையை 11 ஆண்டுக்குள் முடித்துக் கொள்ள வேண்டும், 7-ஆவது ஊதியக் குழு ஒப்பந்தத்தில் கூறியபடி, ஓய்வூதிய வரையறையில் திருத்தம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிகழ்வில் சங்கத்தின் செயலா் பெரியதம்பி செயல் அறிக்கை வாசித்தாா். பேராசிரியை குணவதி வாழ்த்திப் பேசினாா். பொதுச் செயலா் மனோகரன், பேராசிரியா்கள் சண்முகசுந்தரம், பாா்த்தசாரதி, விஜயன், ராமசாமி, லட்சுமணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, பேராசிரியா் ஆனந்தன் வரவேற்றாா். ஜெகநாதன் நன்றி கூறினாா்.