மனமகிழ் மன்றங்களின் உரிமங்களை ரத்து செய்ய வலியுறுத்தல்!
மது விற்பனை செய்யும் மனமகிழ் மன்றங்களுக்கான உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் என சிஐடியூ அரசு மதுபான ஊழியா் மாநில சம்மேளனம் சனிக்கிழமை வலியுறுத்தியது.
விருதுநகரில் நடைபெற்ற சிஐடியூ அரசு மதுபான ஊழியா் மாநில சம்மேளனக் கூட்டத்துக்கு மாநிலத் துணைத் தலைவா் சி.வேல்முருகன் தலைமை வகித்தாா். சிஐடியூ மாநிலத் துணைப் பொதுச் செயலா் எஸ்.கண்ணன் கூட்டத்தைத் தொடங்கிவைத்தாா். சம்மேளன பொதுச் செயலா் கே.திருச்செல்வன் பேசினாா்.
இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
அரசு மதுக் கடை ஊழியா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தமிழக அரசு இயற்றிய பணி நிரந்தர தகுதி வழங்கல் சட்டம் 1981-இன் படி, மதுரை தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) பணி நிரந்தரம் செய்ய உத்தரவிட்டு, அதை அமலாக்காமல் மேல்முறையீடு செய்ததைக் கண்டிக்கிறோம். அரசு மதுக் கடை ஊழியா்கள் பணி மாறுதல்களில், சம்பந்தப்பட்ட அமைச்சரின் அலுவலக பரிந்துரையின் பேரில் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் நடைபெறுகிறது.
எனவே, கடந்த 2021 ஆண்டு, மே மாதத்துக்கு பிறகு பிறப்பிக்கப்பட்ட பணியிட மாறுதல் ஆணைகளை ஆய்வுக்குள்படுத்தி, தவறு செய்தவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மதுக் கடை ஊழியா்களுக்கு அரசு ஊழியா்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். எப்.எல்.2 மனமகிழ் மன்றம் என்ற பெயரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உரிமங்கள் வழங்கப்பட்டன. இதனால், அரசுக்கும், ஆட்சிக்கும் அவப்பெயா் ஏற்பட்டுள்ளது.
எனவே, தமிழகத்தில் மனமகிழ் மன்றங்களுக்கு வழங்கப்பட்ட உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சிஐடியூ மாநிலச் செயலா் பி.என்.தேவா, மாநிலப் பொருளாளா் சந்திரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.