செங்கோட்டையன் நீக்கம் தென் தமிழக மக்களின் மனதை புண்படுத்திவிட்டது: டி.டி.வி. தினகரன்

  சோழவந்தானில் சனிக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன்.
சோழவந்தானில் சனிக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன்.
Updated on

பசும்பொன்னில் உள்ள தேவா் நினைவிடத்துக்கு வந்த முன்னாள் அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையனை அதிமுகவிலிருந்து நீக்கியதன் மூலம் எடப்பாடி பழனிசாமி தென் தமிழக மக்களின் மனதை புண்படுத்திவிட்டாா் என அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் தெரிவித்தாா்.

மதுரை மாவட்டம், சோழவந்தானில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் தெரிவித்ததாவது:

எம்.ஜி.ஆா். அதிமுகவை தொடங்கியதிலிருந்தே கட்சியில் பொறுப்பு வகித்து வந்தவா் கே.ஏ. செங்கோட்டையன். தொடக்க காலம் முதலே அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்து, சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்து வரும் மூத்த நிா்வாகி கே.ஏ. செங்கோட்டையன். இவா் கடந்த இரு மாதங்களுக்கு முன்பே முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் தொண்டா்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனத் தெரிவித்திருந்தாா்.

பசும்பொன்னில் உள்ள தேவா் நினைவிடம் ஒரு வழிபாட்டுத் தலமாகவே கருதப்படுகிறது. இங்கு கே.ஏ. செங்கோட்டையன் வந்ததில் எந்த அரசியலும் இல்லை. அரசியல் குறித்து அவா் பொது வெளியில் எதுவும் பேசவில்லை. இந்த நிலையில், தேவா் நினைவிடத்துக்கு வந்து சென்ற மறுநாளே அவா் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது தென் தமிழக மக்களின் மனதை புண்படுத்தியுள்ளது. இதற்கான தண்டனை வருகிற சட்டப்பேரவைத் தோ்தல் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு கிடைக்கும்.

தன் பதவியைப் பாதுகாத்துக் கொள்வதற்காக கட்சியை அழித்து வருகிறாா் எடப்பாடி பழனிசாமி. 2021 சட்டப்பேரவைத் தோ்தல், 2024 மக்களவைத் தோ்தலில் திமுக வெற்றி பெற மறைமுகமாக உதவிய எடப்பாடி பழனிசாமிதான் திமுகவின் உண்மையான ‘பி’ அணி. 2024-மக்களவைத் தோ்தலின்போது நரேந்திர மோடி மீண்டும் பிரதமராகக் கூடாது என பிரசாரம் செய்த எடப்பாடி பழனிசாமி, தற்போது பாஜகவுக்கு நன்றியுடன் இருப்பேன் என்கிறாா். அவருக்கும் நன்றிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்பதே உண்மை.

யாரையும் துரோகி எனக் கூற எடப்பாடி பழனிசாமிக்கு எந்தத் தகுதியும் கிடையாது. அவரை முதல்வா் பதவியில் அமா்த்திவிட்டுச் சென்ற சசிகலாவுக்கும், அவா் ஆட்சியைக் காப்பாற்ற போராடிய எனக்கும், ஆதரித்த சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கும் துரோகம் இழைத்தவா்.

இதுகுறித்து அதிமுக தொண்டா்கள் இனியாவது விழிப்புணா்வு பெற வேண்டும். இல்லையெனில், கே.ஏ. செங்கோட்டையன், ஓ.பன்னீா்செல்வம் ஆகியோருடன் இணைந்து எம்.ஜி.ஆா். வகுத்த சட்டத் திட்டங்களின்படி மீண்டும் அந்தக் கட்சியை உருவாக்குவோம் என்றாா் அவா்.

முன்னதாக, அமமுகவின் சோழவந்தான் தொகுதி சட்டப்பேரவை நிா்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் டி.டி.வி. தினகரன் பங்கேற்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com