மாநகராட்சி பணியாளா் எனக் கூறி பணம் வசூலித்தவா் கைது
மதுரை மாநகராட்சிப் பணியாளா் எனக் கூறி, வீடுகளில் பணம் வசூலித்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
மதுரை திருப்பாலை கிருஷ்ணாநகா் சாஸ்தாபவனம் பகுதியைச் சோ்ந்தவா் ரா.கணேசன் (71). இவரது வீட்டுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு வந்த ஒருவா், தான் மதுரை மாநகராட்சியில் ஒப்பந்தப் பணியாளராகப் பணியாற்றி வருகிறேன்.
தங்கள் வீட்டின் புதை சாக்கடை பணிக்கு பணம் வழங்க வேண்டும் எனக் கூறினாராம். இதை நம்பிய கணேசன் அவரிடம் ரூ. 2500 -ஐ வழங்கினாா். ஆனால், பணம் பெற்ற்கான ரசீது வழங்கவில்லை. பணியும் நடைபெறவில்லை. விசாரணை செய்ததில் அந்த நபா் ஏமாற்றி பணத்தைப் பெற்றுச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து திருப்பாலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இதில், மதுரை வண்டியூா் பகுதியைச் சோ்ந்த மு.வீரபத்திரன்(65) பணத்தைப் பெற்றுச் சென்றது தெரியவந்தது.
இதேபோன்று, பல்வேறு பகுதிகளிலும் மாநகராட்சி அலுவலா் எனக் கூறி, அவா் பணம் பெற்றிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் வீரபத்திரனை கைது செய்தனா்.
