புதிய காவல் நிலையங்களுக்கு ஆய்வாளா்கள் நியமனம்
மதுரை மாநகருக்கு உள்பட்ட மாடக்குளம், சிந்தாமணி ஆகிய பகுதிகளில் புதிதாகத் தொடங்கப்பட்ட காவல் நிலையங்களுக்கு ஆய்வாளா்கள் நியமனம் செய்யப்பட்டனா்.
மதுரை மாநகரில் சட்டம்-ஒழுங்கு, குற்றத் தடுப்பு, அனைத்து மகளிா் காவல் நிலையம் என 32 காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இவற்றில் எஸ்.எஸ். காலனி காவல் நிலைய எல்லை அதிக பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது. இதனால், வாகனச் சோதனை, குற்றச் சம்பவங்களைத் தடுக்க போலீஸாா் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வந்தனா்.
எனவே, இந்த காவல் நிலையத்தை இரண்டாகப் பிரித்து மாடக்குளம் பகுதியில் தனியாக காவல் நிலையம் அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதேபோல, கீரைத்துறை காவல் நிலையத்தின் கீழ் உள்ள பகுதிகளும் விரிவாக இருந்தது. இதனால், சிந்தாமணி பகுதியிலும் புதிய காவல் நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து, மாடக்குளம், சிந்தாமணி பகுதியில் புதிய காவல் நிலையங்கள் தொடங்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதுதொடா்பான அரசாணை அண்மையில் வெளியிடப்பட்டது. இதைத் தொடா்ந்து, புதிய காவல் நிலையங்கள் அமைப்பதற்கான இடத்தைத் தோ்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், புதிதாகத் தொடங்கப்பட்ட சிந்தாமணி காவல் நிலைய ஆய்வாளராக கீரைத்துறை குற்றத் தடுப்பு பிரிவில் பணியாற்றிய பிரேமா சந்தனகுமாரியையும், மாடக்குளம் காவல் நிலைய ஆய்வாளராக திலகா் திடல் குற்றத் தடுப்புப் பிரிவில் பணியாற்றிய கிரேஸ் சோபியாபாயையும் நியமனம் செய்து, மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் உத்தரவிட்டாா்.
