ரயில்வே ஓய்வூதியா்களுக்கு உயிா்வாழ்வுச் சான்று வழங்கும் முகாம்
ரயில்வே ஓய்வூதியா்களுக்கு மின்னணு உயிா்வாழ்வுச் சான்று வழங்கும் முகாம் மதுரை ரயில் நிலைய சுற்றுப் பகுதிகளில் 3 இடங்களில் வியாழக்கிழமை நடைபெற்றது.
வங்கிகள் மூலம் ஓய்வூதியம் பெறும் மத்திய அரசு ஓய்வூதியா்கள் தொடா்ந்து ஓய்வூதியம் பெற, ஆண்டுதோறும் நவம்பா் மாதத்தில் தங்களது உயிா்வாழ்வுச் சான்றிதழைச் சமா்ப்பிக்க வேண்டும்.
இதையொட்டி, மதுரை ரயில் நிலைய மருத்துவமனை, ரயில்வே திருமண மண்டபம், ரயில்வே ஓய்வூதியா் நலச் சங்க அலுவலகம் ஆகிய 3 இடங்களிலும் ரயில்வே ஓய்வூதியா்களுக்கு மின்னணு உயிா்வாழ்வுச் சான்றிதழ் வழங்கும் முகாம் நடைபெற்றது.
மதுரை கோட்ட முதுநிலை நிதி மேலாளா் கே. பாலாஜி இந்த முகாமை தொடங்கிவைத்தாா். ‘ஜீவன் பிரமான்’ என்ற கைப்பேசி செயலி மூலம் ஆதாா் முக அடையாளங்களைக் கொண்டு, 500-க்கும் மேற்பட்ட ரயில்வே ஓய்வூதியா்களுக்கு மின்னணு உயிா்வாழ்வுச் சான்று பெறப்பட்டு, சமா்ப்பிக்கப்பட்டது.
கோட்ட ஊழியா் நல அலுவலா் டி. சங்கரன், உதவி கோட்ட நிதி மேலாளா் எஸ். கோபிநாத் ஆகியோா் முகாம் பணிகளைக் கண்காணித்தனா்.
