கடன்பெறாத விவசாயிகளுக்கு மானியத்தில் பயிர் காப்பீட்டு திட்டம்
By dn | Published on : 28th September 2012 10:48 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திண்டுக்கல், செப். 27: கடன் பெறாத சிறு, குறு, இதர விவசாயிகளுக்கு
மானியத்தில் பயிர் காப்பீடு வழங்கப்பட்டு வருவதாக ஒட்டன்சத்திரம் வட்டார வேளாண் உதவி
இயக்குநர் பெ.பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
நெல், சோளம், மக்காச்சோளம், துவரை, உளுந்து, கடலை, சூரியகாந்தி, பருத்தி ஆகிய
பயிர்களை உற்பத்தி செய்யும் கடன் பெறாத விவசாயிகளுக்கு மானியத்தில் பயிர்
காப்பீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
இயற்கை சீற்றத்தால் பாதிப்பு ஏற்படும்போது இழப்பை ஈடுகட்ட பயிர் காப்பீடு ஒரு
வரப்பிரசாதமாகும். ஒரு ஹெக்டேர் பயிர் சாகுபடிக்கு விவசாயிகளின் பங்குத் தொகை இதில்
மிகவும் குறைவு. இந்த வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்தினால் எதிர்பாராது ஏற்படும்
இழப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள பயிர் காப்பீடு உதவும்.
ஒரு ஹெக்டேருக்கு சிறு, குறு விவசாயிகள் செலுத்த வேண்டிய தொகை,
அடைப்புக்குறிக்குள் இதர விவசாயிகள் செலுத்த வேண்டிய தொகை விவரம்.
நெல் ரூ.196 (ரூ.217), சோளம் ரூ.50 (ரூ.56), மக்காச் சோளம் ரூ.195 (ரூ.216),
உளுந்து ரூ.195 (ரூ.96), கடலை ரூ.459 (ரூ.510), சூரியகாந்தி ரூ.428 (ரூ.476),
பருத்தி ரூ.646 (ரூ.718), கரும்பு ரூ.1,890 (ரூ.2100).
நெல் பயிருக்கான காப்பீடு செய்திட வரும் டிச. 31 ஆம் தேதி, பருத்திக்கு வரும்
அக்.31 ஆம் தேதி, இதர சிறு தானியம், எண்ணெய் வித்து, பயறு வகை பயிர்களுக்கு வரும்
செப். 30 ஆம் தேதி கடைசி நாளாகும்.
பயிர் காப்பீடு செலுத்த விரும்பும் விவசாயிகள் உதவி வேளாண் அலுவலர்களை அணுகி,
செலுத்த வேண்டிய பிரீமியத் தொகையை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண்
கூட்டுறவு சங்கங்கள், வேளாண் விரிவாக்க மையங்களில் செலுத்தி பயனடையலாம் என வேளாண்
உதவி இயக்குநர் பெ.பாஸ்கரன் தெரிவித்தார்.