Enable Javscript for better performance
பழனி, தொப்பம்பட்டி ஒன்றியப் பகுதிகளில் அமைச்சர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    பழனி, தொப்பம்பட்டி ஒன்றியப் பகுதிகளில் அமைச்சர் ஆய்வு

    By dn  |   Published on : 28th September 2012 10:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பழனி, செப். 27: பழனி மற்றும் தொப்பம்பட்டி ஒன்றியப் பகுதிகளில் பல கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வரும் பணிகளை, வியாழக்கிழமை பொதுப்பணித் துறை அமைச்சர் ராமலிங்கம் ஆய்வு செய்தார்.
     திண்டுக்கல் மாவட்டத்தில் நீர்வள, நிலவள மேம்பாட்டுத் திட்டத்தின் (அயன்வாம்) கீழ், சுமார் ரூ. 60 கோடி மதிப்பில் பல்வேறு பணிகள் பொதுப்பணித் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பழனி ஒன்றியம், தாமரைக்குளம் பகுதியில் ரூ. 88 லட்சம் செலவில் கரைகளைப் பலப்படுத்துதல் மற்றும் தூர்வாருதல் பணிகளும், அ.கலையம்புத்தூரில் ரூ. 2 கோடியே 18 லட்சம் மதிப்பில் தடுப்பணைக் கட்டும் பணியும் நடைபெற்று வருகின்றன.
     மேலும், பாலாறு-பொருந்தலாறு ஜீரோ பாயின்ட்டில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவுக்கு இடது பிரதான வாய்க்கால் இருபுறமும் காங்கிரீட் சுவர் அமைக்கும் பணி ரூ. 18 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
     இப்பணிகளை, தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் ராமலிங்கம் வியாழக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார். காங்கிரீட் கலவை, கம்பிகளின் தன்மை மற்றும் சிமென்ட் தரத்தை ஆய்வு செய்த அமைச்சர், அ.கலையம்புத்தூர் அலுவலகத்திலும் ஆவணங்களை சரிபார்த்தார். அப்போது, அ.கலையமுத்தூர் ஊராட்சித் தலைவர் சுப்பிரமணியம் உடனிருந்தார்.
     அதையடுத்து, தொப்பம்பட்டி ஒன்றியம் கொத்தயத்தில் நல்லதங்காள் ஓடைக்கு குறுக்கே சுமார் ரூ. 7 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் தடுப்பணையையும் அமைச்சர் ஆய்வு செய்தார். தொப்பம்பட்டி ஒன்றியச் செயலர் கிட்டுசாமி, கொத்தயம் ஊராட்சித் தலைவர் தங்கவேல் ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.
     தடுப்பணைக்காக, சுமார் 200 ஏக்கருக்கும் மேல் நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில், இதற்கான தொகை நில உரிமையாளர்களுக்கு வழங்கப்படவில்லை என பலரும் புகார் தெரிவித்தனர். இதனால், பணிகள் தாமதமாக நடைபெறுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
     இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி விரைவில் நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்படும், என அவர் தெரிவித்தார்.
     ஆய்வின்போது, தமிழக பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் ரங்கநாதன், கண்காணிப்புப் பொறியாளர் பன்னீர்செல்வம், செயற்பொறியாளர் சந்திரமோகன், உதவிச் செயற்பொறியாளர் ராஜேந்திரன், பாலசமுத்திரம் வல்லத்தரசு, அட்மா தலைவர் தேவராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai