Enable Javscript for better performance
பிரேதப் பரிசோதனையில் தேவையற்ற காலதாமதத்தை தவிர்க்க மருத்துவர்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    பிரேதப் பரிசோதனையில் தேவையற்ற காலதாமதத்தை தவிர்க்க மருத்துவர்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை

    By dn  |   Published on : 28th September 2012 10:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திண்டுக்கல், செப். 27: பிரேதப் பரிசோதனை மேற்கொண்டு சடலத்தை உரியவர்களிடம் ஒப்படைப்பதில் தேவையற்ற காலதாமதம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் எச்சரிக்கை விடுத்தார்.
     திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வியாழக்கிழமை அரசு ஆரம்ப சுகாதார நிலைய செயல்பாடுகள், பொது சுகாதாரத் திட்டச் செயலாக்கம் தொடர்பான அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது:
     மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளின் தரம் மற்றும் சேவைகள் பொது மக்களுக்கு தங்கு தடையின்றி கிடைக்க வழிவகை செய்யும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள, இதுபோன்ற கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
     மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனையை குறிப்பிட்ட நேரத்தில் முடித்து, உரியவர்களிடம் சடலத்தை வழங்காமல் தேவையற்ற காலதாமதம் செய்தால், அந்த மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவமனை வளாகத்தினை தூய்மையாகப் பராமரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மருத்துவமனைகளில் எலி, நாய் தொல்லைகளை போக்க, பேரூராட்சி மற்றும் நகராட்சிகள் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
     பிறப்பு மற்றும் இறப்புகளைப் பதிவு செய்வது கட்டாயமாகும். பிறப்பு பதிவு செய்த 12 மாதங்களுக்குள் குழந்தையின் பெயரைப் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே, பெற்றோர்கள் தவறாது தங்கள் குழந்தைகளுடைய பெயரை பதிவு செய்ய வேண்டும். பிறப்பு பதிவு செய்த பின் ஒருமுறை இலவசமாக பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படும். 1.1.2000-க்கு முன் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் வரும் 31.12.2014-க்குள் பெயர் பதிவு செய்யவேண்டும், என அரசு காலக்கெடு நிர்ணயம் செய்துள்ளது.
     பிறப்புச் சான்றிதழ் பள்ளியில் சேர, வயதினை நிரூபிக்க, காப்பீட்டு உரிமை கோர, பாஸ்போர்டுக்கு விண்ணப்பிக்க, வாரிசு உரிமை பெற, ஓட்டுநர் உரிமம் பெற, குடும்ப உதவித்தொகை பெற போன்ற அனைத்துத் தேவைகளுக்கும் பயன்படுகின்றது என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
     அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிகழும் பிறப்புகளுக்கு, தாய்மார்கள் மருத்துவமனையிலிருந்து சிகிச்சை முடிந்து வீட்டுக்குச் செல்லும் முன் இலவசமாக பிறப்புச் சான்றிதழ் வழங்கிடவும், எந்தவொரு பிறப்பு மற்றும் இறப்பை விடுபடாமல் பதிவு செய்து பொதுமக்களுக்கு சான்றிதழ் வழங்க வேண்டுமெனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, என ஆட்சியர் பேசினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai