Enable Javscript for better performance
\\\"சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் மகளிர் குழுவினர்\\\'- Dinamani

சுடச்சுட

    

    திண்டுக்கல், செப். 29:    கிராமத்தில் மகளிர் சுயஉதவிக் குழுவினர் சமூக மாற்றத்தை ஏற்படுத்தி வருவதாக காந்திகிராம பல்கலைக் கழக வேந்தர் ரீனா ஜப்வாலா தெரிவித்தார்.
     காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் சுயஉதவிக் குழு பெண்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் பேசியது:
     சுய உதவிக்குழுவினர் வங்கிக் கடன் பெற்று சுயதொழில் துவங்கி முன்னேற்றம் அடைந்து வருவது மகிழ்ச்சியைத் தருகிறது. இங்கு பேசிய பெண்கள், தங்களது குழந்தைகளுக்கு சிறப்பான கல்வி, குடியிருக்க வீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்தனர்.
     நான் தற்போதுதான் இந்தப் பல்கலைக் கழகத்தின் வேந்தராகப் பொறுப்பேற்றுள்ளேன். கிராமக் கல்வி வளர்ச்சிக்காக இந்தப் பல்கலைக் கழகம் மகளிர் குழுவினரோடு  சேர்ந்து பணி மேற்கொண்டு வருகிறது.
     மாற்றங்களை ஒரே நாளில் கொண்டு வந்துவிட முடியாது. கிராம வளர்ச்சிக்கான  பணிகளை பல்கலைக்கழகம் எப்போதும் தொடர்ந்து செய்து வரும் என்றார்.
     பல்கலைக் கழகத் துணைவேந்தர் சோம. ராமசாமி வாழ்த்துரை வழங்கிப் பேசியது:
     குறைந்த விலையில் தரமான வீடுகளைக் கட்டும் பணியினை பல்கலைக் கழகம் சமூகப் பணியாக மேற்கொண்டு வருகிறது. நீராதாரங்களைக் கண்டுபிடிப்பதற்காக தனி மையம் ஆரம்பிக்கப்பட்டு இப்பல்கலைக் கழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இதேபோல் கனிம வளங்களைக் கண்டுபிடிக்கவும், எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்யும் வழிகளைக் காணவும் தனித்துறை உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
     2 கிராமங்களுக்கு இன்டர்நெட் இணைப்பு கொடுத்து, இதன்மூலம் கிராம மக்கள் விவசாயம் தொடர்பாக கல்லூரிப் பேராசிரியர்களுடன் தொடர்பு கொண்டு  சந்தேகங்களுக்கு விளக்கம் பெற வழி காணப்பட்டுள்ளது. மேலும் 20 கிராமங்களுக்கு இந்த வசதி செய்து தரப்பட உள்ளது.
     இதேபோல் குஜிலியம்பாறையில் இளைஞர்களுக்கு ஆங்கில மொழித் திறன் குறித்த பயிற்சி வகுப்பினை பல்கலைக் கழகம் நடத்தி வருகிறது. இந்த ஆண்டு முதல் கணித பாடத்திலும் தேவையான பயிற்சி வழங்க உள்ளது என்றார்.
     முன்னதாக, பேராசிரியர் பழனிதுரை வரவேற்றார். பல்கலை. பதிவாளர்  என். நாராயணசாமி வாழ்த்துரை வழங்கினார். வாழ்நாள் கல்வி துறைத் தலைவர் சுப்புராயன் நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai