போராட்டப் பாதைகள் மீது பெண்கள் நம்பிக்கை வைக்க வேண்டும்: உ.வாசுகி

பெண்கள் போராட்டப் பாதைகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என, ஜனநாயக மாதர் சங்கத்தின் தேசிய செயலர் உ. வாசுகி தெரிவித்தார்.

பெண்கள் போராட்டப் பாதைகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என, ஜனநாயக மாதர் சங்கத்தின் தேசிய செயலர் உ. வாசுகி தெரிவித்தார்.

  திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, சட்டப்பேரவை உறுப்பினர் கே. பாலபாரதி தலைமை வகித்தார். இதில், சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற தேசிய செயலர் உ. வாசுகி பேசியது:

   பாலியல், வரதட்சிணை, பணியிடங்களில் துன்புறுத்தல் மட்டுமின்றி ஜாதி, மத அடிப்படையிலும் பெண்கள் வன்முறைகளை சந்தித்து வருகின்றனர். இதுபோன்ற பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு கிடைக்காது. அது தொடர்ச்சியான போராட்டங்களின் மூலமே சாத்தியப்படும். அதற்கான போராட்டப் பாதைகள் மீது பெண்கள் நம்பிக்கை வைக்கவேண்டும்.

  பெண்களின் முன்னேற்றத்துக்கு சுய உதவிக்குழுக்கள் தேவை என்றாலும், அதோடு மட்டும் நின்றுவிடாமல், போராட்டக் களத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

  66 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில், தற்போதைய மத்திய காங்கிரஸ் அரசு கொண்டு வந்துள்ள உணவுப் பாதுகாப்புச் சட்டம், தற்போது கிடைத்து வரும் உணவினையும் பறிக்கும் வகையிலேயே உள்ளது.

  பொருளாதார நெருக்கடி, உணவுப் பாதுகாப்பு மசோதா, பொது விநியோகத் திட்ட முறையை ஆதார் அட்டையுடன் இணைக்கும் திட்டம் ஆகியவற்றின் மூலம், நாட்டு மக்களின் பாதுகாப்பை மத்திய அரசு கேள்விக்குறியாக மாற்றியுள்ளது.

  மத்தியில் 2009ஆம் ஆண்டு 2ஆவது முறையாக ஆட்சிப் பெறுப்பேற்ற உடன் 100 நாள்களில் உணவு பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்படும் என காங்கிரஸ் அரசு அறிவித்தது. ஆனால், 1200 நாள்கள் கடந்த பின்னர், அதாவது 5 ஆண்டு கால ஆட்சி முடியும் நிலையில், அவசரச் சட்டமாக நிறைவேற்றியுள்ளது. இதன்மூலம், தேர்தலில் லாபம் பெற்றுவிடலாம் என்ற காங்கிரஸின் கனவு பலிக்காது.   பணக்காரர்களுக்கு சிவப்பு கம்பளம் விரிப்பதில் காங்கிரசுக்கும், பா.ஜ.க.வுக்கும் அதிக வேற்றுமை கிடையாது.

  காங்கிரசை சேர்ந்த ராகுல்காந்தி குடிசைக்கு போய் வருவது பரபரப்பு செய்தியாக்கப்படுகிறது. ஆனால், பல ஆண்டுகளாக குடிசையில் வசித்து வரும் நாட்டு மக்களின் எண்ணிக்கை குறித்த செய்திகள் ஏன் வெளியிடப்படுவதில்லை. மக்களின் இந்த நிலைக்கு முக்கிய காரணம், சுதந்திரத்துக்கு பின் அதிக நாள்கள் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் மக்களைப் பற்றி சிந்திக்காமல் இருந்ததே.

  குஜராத்தில் ஆச்சரியப்படும் வகையில் எவ்வித வளர்ச்சியும் ஏற்படவில்லை. ஆனால், அதுபோன்ற மாயத் தோற்றத்தை முதல்வராக உள்ள நரேந்திர மோடி ஏற்படுத்தி வருகிறார். 36 ஆண்டு காலம் மேற்கு வங்கத்தில் ஆட்சியிலிருந்த கம்யூனிஸ்ட்டுகள், நில சீர்த்திருத்தச் சட்டத்தினை செயல்படுத்தி வந்தனர். அதன்மூலம், ஏழைகளுக்கு கிடைத்த நிலங்களை தற்போதைய திரிணாமூல் காங்கிரஸ் அரசு அபகரித்து வருகிறது.  

   விவசாயப் பெண்கள் அனைத்து சலுகைகளையும் பெற வேண்டுமானால், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் அறிவித்ததைப்போல், பெண் விவசாயிகள் சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றார் அவர்.

  கூட்டத்தில், மாதர் சங்கத்தின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com