திண்டுக்கல், செப். 23: அமிலம் பயன்படுத்தும் இடங்களில், அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் கல்லூரி மாணவியர் மீது அமிலம் வீசி தாக்கப்பட்ட சம்பவம், மதுரை மட்டுமின்றி பிற மாவட்டங்களிலும், அமிலம் பயன்படுத்துவோரின் விவரங்கள், அமிலத்தின் வீரியம், அனுமதி பெறப்பட்டுள்ள விவரங்கள் போன்ற தகவல்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
அந்த வகையில், திண்டுக்கல் நகரில் பல இடங்களில், கோட்டாட்சியர் ரா.ஜா. உத்தமன் தலைமையில், அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை திடீர் ஆய்வு செய்தனர்.
அப்போது, நகைக் கடைகள் மற்றும் பேட்டரிகளில் பயன்படுத்தும் அமிலத்தின் வீரியம் ஆய்வு செய்யப்பட்டது. மேலும், அமிலம் வைத்துள்ளவர்கள் உரிய அனுமதி பெற்றுள்ளார்களா என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இது குறித்து, கோட்டாட்சியர் ரா.ஜா. உத்தமன் தெரிவித்தது: பேட்டரிகளில் பயன்படுத்தும் அமிலம் 50 சதவீத அடர்த்தி இருக்கலாம். மற்ற அமிலங்கள் 75 சதவீதம் தண்ணீர் சேர்க்கப்பட்டதாக இருக்கவேண்டும்.
இதற்கு மாறாக, அதிக வீரியம் கொண்ட அமிலம் பயன்படுத்தினால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதியின்றி அமிலம் பயன்படுத்துவோர் யாரும் கண்டறியப்படவில்லை என்றார்.
ஆய்வின்போது, திண்டுக்கல் நகர காவல் துணைக் கண்காணிப்பாளர் ராமசந்திரன், வட்டாட்சியர் முருகேசன், மருந்துக் கட்டுப்பாட்டு அலுவலர் சேவுகராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.