திண்டுக்கல், செப். 23: நவீன விளையாட்டு தொடர்பாக, உடற்கல்வி ஆசிரியர்களுக்கான 3 நாள் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (திண்டுக்கல் பிரிவு) சார்பில், அரசு பள்ளிகளைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்களுக்கு 3 நாள் உண்டு, உறைவிடப் பயிற்சி வழங்கப்படுகிறது.
திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வரும் இப்பயிற்சி முகாமை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ம.செ.க. சுபாஷினி தொடங்கி வைத்தார்.
பள்ளிக் கல்வித் துறையில் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் நவீன விளையாட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதில் இடம்பெற்றுள்ள ஜிம்னாஸ்டிக், ஸ்குவாஷ், தேக்வாண்டோ, குத்துச் சண்டை, சிலம்பம், கேரம், வளைபந்து, செஸ், ஜூடோ, பீச் வாலிபால், நீச்சல் உள்ளிட்ட 14 வகையான விளையாட்டுகளுக்குப் பயிற்சி வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு விளையாட்டிலும் சிறந்து விளங்கும் பயிற்றுநர்களைக் கொண்டு, உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. கல்வி மாவட்டத்துக்கு 25 பேர் வீதம், திண்டுக்கல் மற்றும் பழனி கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த 50 ஆசிரியர்கள் பயிற்சி முகாமில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு அலுவலர் சௌந்தரராஜன், பிஎஸ்என்ஏ கல்லூரி முதல்வர் சக்திவேல், பதிவாளர் சின்னக்காளை, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வே. பழனிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.