பழனி நகர்மன்றக் கூட்டத்தில், தனியார் கேபிள் பதிப்புக்காக சாலைகள் தோண்டப்படுவதைக் கண்டித்து, கவுன்சிலர்கள் விவாதத்தில் ஈடுபட்டனர்.
பழனி நகர்மன்றக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, தலைவர் வேலுமணி தலைமை வகித்தார். துணைத் தலைவர் முருகானந்தம் முன்னிலை வகித்தார்.
இதில், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) செந்தில்குமார், நகரமைப்பு அலுவலர் விமலா, சுகாதார அலுவலர் டாக்டர் பொற்கொடி உள்ளிட்ட பல கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
கடந்த காலங்களில், கேள்வி நேரத்தின் போதே தகராறு ஏற்பட்டு, கூட்டம் பாதியுடன் முடிந்து வந்ததால், இந்த முறை கூட்டம் துவங்கியவுடன் அஜெண்டா வாசிக்கப்பட்டு, நகர்மன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் பெறப்பட்டது.
கூட்டத்தில், நகராட்சிப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் ரெங்கநாதன், பழனியம்மாளுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
நகர்மன்றத் தலைவர் வேலுமணி சார்பில், பை-பாஸ் ரவுண்டானா பகுதியில் முன்னாள் முதல்வர் அண்ணாவுக்கும், நகர்மன்ற துணைத் தலைவர் சார்பில் ரவுண்டானா கார் நிறுத்தப் பகுதியில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கும் சிலைகள் வைக்கும் தீர்மானம் கொண்டுவரப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.
கேள்வி நேரம் துவங்கிய பின், நகரில் எரியாத தெரு விளக்குகள் குறித்து கவுன்சிலர்கள் அகிலாண்டம், காளீஸ்வரி ஆகியோர் தலைவரிடம் புகார் தெரிவித்தனர்.
பழனி நகரில் தற்போது, பல பகுதிகளில் தனியார் தொலைபேசித் துறை கேபிள் பதிப்பதற்காக சாலைகளைத் தோண்டி, அப்படியே விட்டுவிட்டுச் சென்றுள்ளனர். இதற்கு, யார் அனுமதி வழங்கியது என கேள்வி எழுப்பியபோது, அதிகாரிகள் யாரும் சரியான பதிலை தெரிவிக்கவில்லை. அப்போது, கவுன்சிலர்கள் முஜிபுதீன், ஷாகுல் அமீது, செபாஸ்டின் ஆகியோர், அதிகாரிகளின் தவறுகளை ஆதாரத்துடன் சுட்டிக் காட்டினர்.
பழனி நகரின் எல்லைகள் மட்டுமின்றி, சிவகிரிப்பட்டி ஊராட்சி, கோதைமங்கலம், கலிக்கநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளிலும் கேபிள் பதிக்க அதிகாரிகள் கணக்கீடு செய்து, பணத்தை பெற்றுள்ளது குறித்து அவர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு, தலைவர் வேலுமணி விசாரணை செய்யப்படும் எனக் கூறினார்.
மேலும், தனியார் கேபிள் நிர்வாகம் சாலைகளில் குழி தோண்ட மிகக் குறைவான தொகையையே நகராட்சி நிர்வாகம் பெற்றுள்ளது குறித்தும் கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர். முடிவாக, தனியார் கேபிள் பதிப்பில் நகராட்சி நிர்வாகம் ஏராளமான முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது என்றும் கவுன்சிலர்கள் கூறினர்.
அப்போது, மன்றக் கூட்டம் முடிந்து விட்டதாக தலைவர் வேலுமணி தெரிவித்து, கூட்டத்தை நிறைவு செய்தார்.