அணைப்பட்டி அருகே 2.34 ஹெக்டேரில் பிராணிகள் வதைத் தடுப்புச் சங்கத்துக்கு, கோசாலை கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்வதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்ட பிராணிகள் வதைத் தடுப்புச் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ந. வெங்கடாசலம் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் எஸ். விக்டர்ஜெபராஜ் முன்னிலை வகித்தார்.
மாவட்ட பிராணிகள் வதைத் தடுப்புச் சங்கத்துக்கு, அணைப்பட்டி அடுத்துள்ள காமாட்சிபுரம் கிராமத்தில் கோசாலை அமைக்க 2.34 ஹெக்டேர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தில் கோசாலை கட்டுமானப் பணிகளை தொடங்குவதற்காக, பிராணிகள் நல வாரியத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 9 மாதங்களில் சுமார் 1500 நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசியும், நாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த கருத்தடை அறுவைச் சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிராணிகள் வதைத் தடுப்புச் சங்கத்தின் நிர்வாகச் செலவுக்காக, அனைத்து ஊராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் சார்பில் நிதி வழங்கவேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பிராணிகள் வதைத் தடுப்புச் சங்கத்தில், ஆயுள்கால உறுப்பினர்களாக சேர்ந்தவர்களுக்கு, அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
கூட்டத்தில், கால்நடை பாராமரிப்புத் துறை துணை இயக்குநர் பி. ரவிச்சந்திரன், காவல் துணைக் கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.