திண்டுக்கல், செப். 23: கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, நுழைவு வகுப்புகளில் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கிய பள்ளிகளுக்கு, கல்விக் கட்டணமாக ரூ. 74.54 லட்சம் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
திண்டுக்கல் மாவட்டத்தில் 101 மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அதில், 3 சிறுபான்மையினர் பள்ளிகள். மற்றப் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டு முறையில், 2014-15 கல்வியாண்டில் 765 மாணவர்கள், 618 மாணவிகள் என மொத்தம் 1,383 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் அரசின் சார்பில், அந்தந்தப் பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டும். அதற்கான பணிகள் தற்போது விரைவாக நடைபெற்று வருகின்றன. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 98 பள்ளிக்கு, கல்விக் கட்டணமாக ரூ. 74.54 லட்சம் வழங்கப்பட உள்ளது.
ஏற்கெனவே, 2013-14ஆம் ஆண்டுக்கான கல்வி கட்டணம் இதுவரை வழங்கப்படவில்லை. இந்த நிலையில், நிகழாண்டுக்கான கட்டணம் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.